2014-07-01 15:53:52

இஸ்பெயின் அரசத் தம்பதியர், திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு


ஜூலை,01,2014. இஸ்பெயின் அரசர் 6ம் Felipe, அரசி Letizia ஆகிய இருவரும் இத்திங்கள்கிழமை மாலையில் வத்திக்கான் திருத்தந்தையின் நூலகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை 40 நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினர்.
அதற்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் நேரடிச் செயலர் பேரருள்திரு Antoine Camilleri ஆகிய இருவரையும் சந்தித்தனர் இஸ்பெயின் அரசரும், அரசியும்.
இஸ்பெயின் அரசத் தம்பதியரின் இந்த முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம், நல்ல விதமாக அமைந்ததாகவும், இச்சந்திப்பு, திருப்பீடத்துக்கும், இஸ்பெயின் நாட்டுக்கும் ஏற்கனவே நிலவும் நல்லுறவுகளை வலுப்படுத்துவதாய் அமையும் என்ற நம்பிக்கையும் இச்சந்திப்புக்களில் வெளிப்படுத்தப்பட்டன.
இஸ்பெயின் சமுதாயத்தின் நலனுக்காக, திருஅவைக்கும் அந்நாட்டுக்கும் இடையே ஒத்துழைப்பும் உரையாடலும் இடம்பெறுவதை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் இச்சந்திப்புக்களில் வலியுறுத்தப்பட்டதோடு, பல்வேறு பன்னாட்டுப் பிரச்சனைகள் குறிப்பாக, மோதல்கள் இடம்பெறும் பகுதிகள் குறித்து சிறப்பான கவனமும் செலுத்தப்பட்டன என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
மேலும், இச்சந்திப்பின் இறுதியில் இஸ்பெயின் அரசர் 6ம் Felipe, அரசி Letizia ஆகிய இருவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இஸ்பெயின் நாட்டுக்கு வருகைதருமாறு அழைத்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 28ம் தேதியன்று இஸ்பெயின் அரசர் முதலாம் Juan Carlos, அரசி Sofia ஆகிய இருவரும் வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.