2014-07-01 15:58:37

இலங்கை அரசு மக்களைத் தடுத்தாலும் ஐநா விசாரணை நடக்கும்


ஜீலை,01,2014. இலங்கை மீதான பன்நாட்டு விசாரணையை நடத்தவுள்ள ஐ.நா. விசாரணைக்குழுவுடன் தொடர்புகொள்ளும் மக்களை அரசு தடுக்க முயன்றாலும், விசாரணைகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அந்த விசாரணைக் குழுவின் வல்லுனர்களில் ஒருவரான அஸ்மா ஜெஹாங்கிர் தெரிவித்துள்ளார்.
ஃபின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்ட்டி அத்திசாரி, நியூசிலாந்தின் முன்னாள் கவர்னர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கிர் ஆகிய மூன்று துறைசார் வல்லுநர்கள் இந்த விசாரணையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று தீர்மானம் எடுத்துள்ள இலங்கை அரசு, அந்த விசாரணைக் குழுவுடன் தொடர்புகொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வாதிகாரப்போக்கை அரசு பயன்படுத்தி மக்களைத் தடுக்க நினைத்தால், அரசுக்குத்தான் அது பாதகமாக வந்துமுடியும் என்று கூறியுள்ள அஸ்மா ஜெஹாங்கிர், எல்லா தரப்பினரும் புரிந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமது விசாரணைக் குழு ஒருதலைச்சார்பற்ற முறையிலும் சுதந்திரமாகவும் விசாரிக்கும் என்றும் தெரிவித்தார்.
தங்களுக்கு இரகசியமாகத் தகவல்களை அளிப்போரின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளித்த வழக்கறிஞர் அஸ்மா ஜெஹாங்கிர், விசாரணைகள் வரும் ஆகஸ்ட் முதல்-இரண்டு வாரங்களில் தொடங்கும் வாய்ப்புள்ளதாகவும், தங்களது பரிந்துரைகள் அடங்கிய விசாரணை அறிக்கை வருகின்ற மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.