2014-06-30 11:59:31

வாரம் ஓர் அலசல் - பாதி உண்மை, பாதி பொய்


ஜூன்,30,2014. ஒருமுறை கடவுள், அமெரிக்க ஐக்கிய நாடு, சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் தலைவர்களை அவசரக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார். அந்த மூன்று தலைவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கூட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்றனர். குறித்த நேரத்தில் அங்கு வந்த கடவுள், ”இந்த உலகம் இன்னும் மூன்று நாள்களில் அழிந்துவிடும், யோனா இறைவாக்கினர் நினிவே மக்களுக்குச் சொன்னதுபோல நீங்களும் உங்கள் குடிமக்களுக்குச் சொல்ல வேண்டும்” எனச் சொன்னார். அந்தத் தலைவர்களின் ஆர்வம் சோகமாக மாறியது. ஆயினும் இதைச் சொன்னவர் கடவுள் எனபதால் இதைக் குடிமக்களுக்குச் சொல்வோம் என மூவரும் ஒப்பந்தம் செய்தனர். அவரவர் நாடுகளுக்குச் சென்று தலைநகரில் பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டினர். அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிபர் சொன்னார்: ”நமக்கு ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் உள்ளது. நல்ல செய்தி என்னவெனில் கடவுள் இருக்கிறார். கெட்ட செய்தி என்னவெனில், அமெரிக்கா இன்னும் மூன்று நாள்களில் அழிந்துவிடும்” என்று. சீன அதிபர் செய்தியாளர்களை உன்னிப்பாய் நோக்கிச் சொன்னார்: ”நமக்கு ஒரு கெட்ட செய்தியும், ஒரு மோசமான செய்தியும் உள்ளது. கெட்ட செய்தி என்னவெனில், இந்த உலகம் இன்னும் மூன்று நாள்களில் அழிந்துவிடும். மோசமான செய்தி என்னவெனில், நமது நம்பிக்கைக்கு முரணாக, கடவுள் இருக்கிறார்” என்று. இந்தியப் பிரதமர் ஒலிவாங்கியையும் தனது தொண்டையையும் நன்றாகச் சரிசெய்து பின்னர், எதிர்க்கட்சியைக் கண்டனம் செய்துவிட்டுச் சொன்னார்: ”நமக்கு ஒரு நல்ல செய்தியும், மிக நல்ல ஒரு செய்தியும் உள்ளது. நல்ல செய்தி என்னவெனில் கடவுள் இருக்கிறார். மிக நல்ல செய்தி என்னவெனில், இந்தியாவிலிருந்து ஏழ்மை இன்னும் மூன்று நாள்களில் ஒழிந்துவிடும்” என்று.
அன்பு நெஞ்சங்களே, ஓர் இதழில் வாசித்த ஒரு வேடிக்கையான கதை இது. கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இதில் பாதி உண்மை, பாதி பொய் இருப்பதை யூகிக்க முடிகின்றது. உண்மையை அதன் முழுமையோடு எதிர்கொள்வதற்கு எவரும் இன்று தயாராக இல்லை. உண்மை கசக்கும் என்று சொல்வதுண்டு. இந்த உலகத்தின் பாதுகாவலர் என்று தன்னைப் பற்றித் தானே பெருமையடித்துக்கொள்ளும் அமெரிக்க ஐக்கிய நாடு, விக்கிலீக்ஸ், ஸ்னோடென் போன்றவைகளில் சிக்கிக்கொண்டது. தனது தவறுகளை ஏற்றுக்கொள்வதை விடுத்து பாதி உண்மைச் செய்திகளை அந்நாடு வெளியிடுகின்றது. அமெரிக்காவின் மோசமான பக்கத்தைத் தெரிந்தவர்கள் மறைவாக வாயடைக்கப்படுகின்றனர் எனச் சொல்லப்படுகிறது. இப்படி பல நாடுகள் பற்றிப் பேசலாம். நாட்டில் நடப்பது ஒன்றாக இருக்கும், ஆனால் வெளியில் அரசு வெளியிடும் அறிக்கை வேறுவிதமாக இருக்கும். அதனால்தான் பல சமயங்களில் அரசின் புள்ளி விபரம் இப்படிச் சொன்னாலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கணிப்பு வேறு என, பல நேரங்களில் செய்தி அறிக்கையில் நாம் சொல்ல வேண்டியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி என்ன சொல்வது? தேர்தலுக்கு முன்னர் வாக்காளர் பெருமக்கள் காலில் விழுந்து கும்பிடக்கூடத் தயங்காத அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்த கையோடு மௌனமாகிவிடுகின்றனர். அவர்களிடம் போய் பாமரமக்கள் கெஞ்சுவதையும், அவர்கள் உதாசீனப்படுத்தப்படுவதையும் திரைப்படங்களில் காட்டுகின்றனர்.
நாம் பார்க்கும் விளம்பரங்களையும், சுவரொட்டிகளையும் பார்க்கும்போது இவையெல்லாம் முழு உண்மை என, நம்மால் பல நேரங்களில் சொல்ல முடிவதில்லை. இப்படித்தான் ஒருநாள், சந்தையில் காய்வெட்டும் ஒரு சிறிய கருவி பற்றித் தொண்டை தேய ஒருவர் விளம்பரம் செய்துகொண்டிருந்தார். சரக் சரக்கென காய்களை வெட்டிக்கொண்டிருந்தார். ஆனால் ஆசையில் அதை வாங்கி வீட்டில் கொண்டுவந்து வெட்டிப் பார்த்தால், ஐயோ ஏமாந்துவிட்டோமே என வருத்தப்பட நேர்ந்தது. தலைமுடி கொட்டாது, முடி கருகருவென வளரும், சருமம் பளபளப்பாகும் என்று ஷாம்பு, சோப் விளம்பரம் செய்கிறார்கள். அப்படிச் விளம்பரம் திரையில் ஓடிக்கொண்டிருக்கும்போதே, அய்யோ இதையெல்லாம் நான் பயன்படுத்தினால், இருக்கிற தலைமுடியும் உதிர்ந்துவிடும் எனச் சொல்லப்படுவதைக் கேட்கலாம். இங்கு இத்தாலியில் சந்தைக்கோ கடைகளுக்கோ செல்லும்போது, ஒரு நாட்டின் பெயரைச் சொல்லி, இது அந்த நாட்டுத் தயாரிப்பு இல்லை, இது இத்தாலியில் தயாரித்தது என்று சொல்கிறார்கள். பகட்டான பொருள்கள் குறைந்த விலைக்குப் விற்கப்படுகின்றன. ஆனால் அதன் ஆயுள் எவ்வளவு காலம் என்பதுதான் கேள்வி. பல இடங்களில் பாதி பொய், பாதி உண்மை. இந்நிலை ஏன் என்று நாம் சிந்தித்தது உண்டா!.
அய்யோ அந்த ஆளா, அவர் வாயிலிருந்து வெளியே வருவதெல்லாம் நம்ப முடியாதவை என்று சொல்லக் கேள்விப்படுவதில்லையா?. ஓர் இதழில் வாசித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அந்தக் கல்லூரியில் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு வணிகயியல் தேர்வு இருந்தது. இரு மாணவர்கள் ஞாயிறன்று தேர்வுக்குப் படிப்பதற்குப் பதிலாக இரவு விருந்தொன்றில் கலந்துவிட்டு தாமதமாக உறங்கச் சென்றார்கள். நன்றாகத் தூங்கிவிட்டதால் தேர்வுக்குச் செல்லவில்லை. பின்னர் அவ்விருவரும் பேராசிரியரிடம் சென்று தேர்வுக்கு வராத காரணத்துக்கு விளக்கம் கொடுத்தனர். ஞாயிறன்று ஊருக்கு வெளியே சென்றோம். ஞாயிறு இரவு தாமதமாக காரை ஓட்டிக்கொண்டு வந்தபோது ஒரு சக்கரம் பழுதடைந்துவிட்டது. அதைச் சரிசெய்வதற்குப் பலமணி நேரம் ஆகியது. எனவே இந்தத் தேர்வை அடுத்த நாள் எழுதுகிறோம் என இருவரும் கேட்டுக்கொண்டனர். பேராசிரியரும் சரி என்று சொல்லி அடுத்த நாள் காலை எட்டரை மணிக்குத் தேர்வு என்று கூறினார். அவ்விரு மாணவர்களும் அடுத்தநாள் காலையிலே வந்துவிட்டனர். பேராசிரியரும் இரு கவர்களில் 2 கேள்விகளை வைத்து இருவரையும் தனித்தனியாக இரு அறைகளுக்கு அனுப்பினார். முதல் கேள்விக்கு 5 மார்க். கடந்த 60 ஆண்டுகளில் இந்திய வரலாற்றில் நடந்த மிக முக்கியமான நிகழ்வு என்ன?, அதை 25 வார்த்தைகளுக்குக் குறையாமல் எழுத வேண்டும். அடுத்த கேள்விக்கு 95 மார்க். ஞாயிறன்று உங்கள் காரில் எந்தச் சக்கரம் பழுதடைந்தது?
அன்பு நெஞ்சங்களே, உள்ளதை உள்ளபடி சொல்வதற்கு ஏன் பயப்படுகிறோம்? சிறு பிள்ளையிடம், நீ இதை உடைத்தியா என்று கேட்டால், ஆமாம் என்ற பதில் உடனடியாக வருவது கடினம்தான். சிறுபிள்ளை முதல் நாடாளும் தலைவர்கள் வரை ஏறக்குறைய எல்லாரும் பேசுவதில் பாதி உண்மை, பாதி பொய் இருக்கின்றது. நாம் செய்ததை செய்ததுபோல் ஏன் ஏற்பதில்லையென்றால், தண்டனை கிடைத்துவிடும், தன்னைப் பற்றித் தவறாக நினைப்பார்கள், தனது பெயர் கெட்டுவிடும் போன்ற எண்ணங்கள்தான் காரணம். அன்பு நெஞ்சங்களே, தவறு செய்யாத மனிதர் யாருமே இல்லை. தான் செய்த தவறுகளை ஒத்துக்கொண்டு உயரிய நிலைக்கு வந்தவர்கள் பலர்.
கடந்த சனவரி 29ம் தேதியன்று 107 ஆண்டுகளாக குற்றங்களே நடக்காத ஒரு கிராமம் பற்றிய செய்தி வெளியாகியிருந்தது. இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பூல்ஜர் என்ற கிராமத்திலுள்ள காவல் நிலையத்துக்கு, அங்குள்ள கிராம மக்களிடமிருந்து கடந்த 107 ஆண்டுகளாக ஒரு புகார்கூட வந்ததில்லையாம். அக்கிராமத்தில் குற்றங்களே நடைபெறுவதில்லையாம். அக்கிராமத்தில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களும் தங்களுக்குள் பாகுபாடின்றி வாழ்வதால் சாதி, மதக் கலவரங்கள் ஏற்பட்டதில்லையாம். பெண்கள் சுதந்திரமாக வெளியில் சென்று வரலாம். யாரும் பாலியல் வன்செயலுக்கு உள்ளானது கிடையாதாம். திருட்டு என்பதே இம்மக்களுக்குத் தெரியாதாம். அவர்களுக்குள் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளை கிராம சபை தீர்த்து வைக்கிறதாம். மாநில அரசும் இக்கிராமத்தைச் சிறந்த கிராமமாக அறிவித்து விருது வழங்கியுள்ளது.
ஒவ்வொருவரும் உள்மன சுதந்திரத்துடன் வாழ்ந்தால் பிரச்சனைகள் தீரும். தன்னைப் பற்றிய தாழ்வான மதிப்பீட்டைத் தவிர்த்து, தனது உண்மையான திறமைகளையும், குணங்களையும் இருப்ப்து இருப்பது போல் ஏற்றால், பாதி உண்மை பாதி பொய் பேச வேண்டிய தேவை இருக்காது. Friedrich Nietzsche என்பவர் சொன்னார் : “நீ என்னிடம் பொய் சொன்னாய் என்பதால் நான் வருத்தப்படவில்லை. ஆனால், இனிமேல் என்னால் உன்னை நம்ப முடியாதே என்பதுதான் வருத்தமாக இருக்கின்றது” என்று. ஆம். ஒருவர் உண்மை பேசவில்லை என்பதை ஆழமாக ஆதாரத்துடன் உணர்ந்துவிட்டால் பின்னர் அந்த ஆள் உண்மையையே சொன்னாலும்கூட நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும். ஒருவர் அந்த ஆள்மீது வைத்திருந்த நம்பகத்தன்மை போய்விடும். பாதிப் பொய் பாதி உண்மை பேசும் நபரும் தனது நம்பகத்தன்மையை இழக்கிறார். அன்பர்களே, வாழ்க்கையில் பிறரின் நம்பிக்கைக்குரியவராய் வாழ்வது அவசியமானது, உயர்வானது. இந்த ஆள் சொல்வதை நம்பலாம் என்ற எண்ணத்தை மற்றவர்களில் பதிப்பது மிகவும் உன்னதமானது.
ஒரு சமுதாயத்திலோ, ஒருவரின் வாழ்விலோ உண்மையான மாற்றம் கொண்டுவர வேண்டுமானால், பாரதியார் பாடியது போன்று, மனதில் உறுதி வேண்டும். வாக்கில் தூய்மை வேண்டும். செயலில் நேர்மை வேண்டும். செயலில் மேன்மை மிளிர வேண்டும். மனம் நாம் சொல்வதைக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்டால் இந்த உலகில் பல்லாண்டு காலம் வாழலாம்.
சத்தியம் என்றால் வாக்கும் மனதும் ஒன்றாக இருப்பதுதான். மனதில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே நாம் சத்தியப் பிரியர்களாக, உண்மை விரும்பிகளாக வாழ்வோம். உண்மை எங்கும் ஓங்கட்டும். அறிவுக்கண் திறக்கட்டும். செய்யும் செயலில் ஆர்வம் பெருகட்டும். பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் பயனுள்ள வாழ்வு பெறட்டும்.








All the contents on this site are copyrighted ©.