2014-06-30 15:47:59

புனிதர்கள் பேதுரு, பவுல் திருவிழாவையொட்டி திருத்தந்தை வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரை


ஜூன்,30,2014. இயேசுகிறிஸ்துவின் மீது கொண்ட விசுவாசத்தால் சகோதரர்களாகி, மறைசாட்சிய மரணத்தால் ஒன்றாகிய புனிதர்கள் பேதுருவும், பவுலும், இயேசுவால் தனிப்பட்டமுறையில் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, தங்கள் அர்ப்பண வாழ்வின் வழியே தங்கள் அழைப்புக்குப் பதிலுரைத்தவர்கள் எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் திருவிழாவையொட்டி ஞாயிறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றும் இப்புனிதர்கள் திருஅவையோடு தொடர்ந்து பேசிக்கொண்டும், மீட்புக்கான வழிகளைக் காண்பித்துக்கொண்டும் இருக்கிறார்கள் என்றார்.
நாம் எத்தகைய பாவக்குழியில் விழுந்தாலும், இயேசு நம்மை மன்னித்துத் தூக்கிவிட தயாராக உள்ளார், ஏனெனில் புனிதர்கள் பேதுருவையும் பவுலையும் மன்னித்து ஏற்றவரும் அவரே எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மத்தியக்கிழக்குப் பகுதியில் குறிப்பாக ஈராக்கில் இடம்பெறும் வன்முறை நிகழ்வுகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிகழ்வுகள் தனக்கு மிகுந்த வேதனையைத் தருவதாகவும், போரைத் தவிர்க்கவும், தேசிய ஒன்றிப்பைக் கட்டிக்காக்கவும், அப்பகுதியின் அரசுகள் பலன் தரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என ஈராக் ஆயர்களோடு இணைந்து தானும் அழைப்புவிடுப்பதாக மூவேளை செப உரையின் இறுதியில் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.