2014-06-30 11:50:45

புனிதரும் மனிதரே : தனது உறவினருக்காகப் போரிட மறுத்து துறவு பூண்டவர் (St. Theobald of Provins)


பிரான்ஸ் நாட்டில் புரோவின்ஸ் என்ற நகரில் 1033ம் ஆண்டில் பிறந்த தெயோபால்டு, Arnoul என்ற பெருமகனின் மகன். Champagne பகுதி Arnoulன் ஆளுகைக்குள் இருந்தது. தெயோபால்டின் தந்தை ப்ரெஞ்ச் பேரரசில் உயர்ந்த பணியில் இருந்ததால் தெயோபால்டும் சிறுவயது முதற்கொண்டு படைவீரராக வளர்க்கப்பட்டார். இவர் தனது குடும்ப மரபுப்படி, திருமணம் செய்து முக்கிய பொறுப்புக்களைக் கொண்டிருக்கவோ, இராணுவத்தில் அல்லது நீதிமன்றத்தில் பணி செய்யவோ விருப்பமின்றி ஆன்மீக வாழ்வில் அதிகம் நாட்டம் கொண்டிருந்தார். Burgundian பகுதியை ஆட்சி செய்வது தொடர்பாக, ஒருமுறை இவரின் உறவினர் 2ம் Odoவுக்கும், Salic அரசர் கொன்ராட்டுக்கும் இடையே போர் தொடங்கியது. அச்சமயத்தில் தெயோபால்டு, தனது உறவினருக்காக படைகளை நடத்திச்சென்று போரிட மறுத்துவிட்டார். மாறாக, ஒரு துறவியாக வேண்டும் என்ற தனது ஆவலை தனது தந்தையிடம் சொல்லி அவரை அதற்கு இணங்க வைத்தார். பின்னர் தெயோபால்டு, வால்ட்டர் என்ற தனது நண்பருடன் Suxy சென்று இருவரும் துறவிகளானார்கள். பின்னர் Pettingen சென்று அங்கு தினக்கூலிகளாக இருவரும் வேலை செய்தனர். பின்னர் இருவரும் பல இடங்களுக்குத் திருப்பயணம் மேற்கொண்டனர். இத்தாலியின் விச்சென்சாவுக்கு அருகிலுள்ள Salanigoவில் வால்ட்டர் நோயினால் இறந்தார். பின்னர் தெயோபால்டு அங்கு ஓர் ஆதீனத்தின் தலைவரானார். அங்கு தெயோபால்டு அவர்களின் உயர் குடும்ப மரபை பலர் அறிய வந்தனர். அவர் இருக்குமிடத்தை அறிந்த அவரது பெற்றோரும் அவரை அங்குக் காண வந்தனர். அவரது தாயும் துறவியானார். தூய வாழ்வு வாழ்ந்த துறவி தெயோபால்டு 1066ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி இறந்தார். திருத்தந்தை 2ம் அலெக்சாந்தர் இவரை 1073ம் ஆண்டில் புனிதர் என அறிவித்தார். புனித தெயோபால்டு இளவயதிலிருந்தே புனித திருமுழுக்கு யோவான், புனித வனத்துப் பவுல், புனித வனத்து அந்தோணியார், புனித அர்செனியுஸ் ஆகிய பெரிய துறவிகளின் வாழ்வால் ஈர்க்கப்பட்டிருந்தார். விவசாயிகள், காலணிகள் செய்பவர், இடுப்புக்கச்சை செய்பவர், கரி எரிப்பவர்கள், திருமணமாகாதவர்கள், இன்னும் பலவிதமான நோயாளிகளுக்குப் பாதுகாவலர் புனித தெயோபால்டு. இவரின் விழா ஜூலை 01.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.