2014-06-30 15:46:15

திருத்தந்தை பிரான்சிஸ் - துவக்கக்காலத்தைவிட தற்போது கிறிஸ்தவ மறைசாட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது


ஜூன்,30,2014. கிறிஸ்தவத்தின் துவக்கக்காலத்தைவிட தற்போது கிறிஸ்தவ மறைசாட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக இத்திங்கள் காலை திருப்பலி மறையுரையின் போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் இத்திங்கள் காலையில் நிறைவேற்றிய திருப்பலியின்போது, கிறிஸ்தவம் சிறு செடியாக இருந்தபோது மறைசாட்சிகளின் இரத்தமே அதனை வளரவைத்தது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போதும் பெரும் எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் மறைசாட்சிகளாக உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.
இயேசுவின் வார்த்தை இறையரசாக வளர்ந்து செழிப்பதற்கு, தூய ஆவியின் பலமும் கிறிஸ்தவர்களின் சாட்சியமுமே முக்கியக் கூறுகளாக இருந்துள்ளன எனவும் கூறினார் திருத்தந்தை.
திருஅவையைக் கட்டியெழுப்புபவரும், வளர்ப்பவரும், திருஅவை சமூகத்தைக் கூட்டுபவரும் தூய ஆவியானவராக இருக்க, திருஅவை வளர்வதற்கு கிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வும் இன்றியமையாததாக இருக்கிறது எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைசாட்சிகளின் இரத்தமே திருஅவை எனும் செடியை தண்ணீர் விட்டு வளர்த்தது என்றார்.
இன்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்திற்காக மறைசாட்சிகளாக உயிரை விடுவதும், சொந்த இடங்களிலிருந்து விரட்டியடிக்கப்படுவதும் தொடர்கிறது எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்தியக்கிழக்குப்பகுதி நாடுகள் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளன எனவும் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.