2014-06-30 15:47:07

திருத்தந்தை பிரான்சிஸ் - ஆயர்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை, ஏனெனில் அடைக்கலமாக இயேசு உள்ளார்


ஜூன்,30,2014. புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் திருவிழாவான இஞ்ஞாயிறன்று உலகின் 24 புதியப் பேராயர்களுக்கு ‘பாலியம்’ எனப்படும் கழுத்துப் பட்டையை வழங்கிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை, ஏனெனில் அடைக்கலமாக இயேசு உள்ளார் என்பது குறித்து எடுத்துரைத்தார்.
கடவுள் நம்மீது கொண்டிருக்கும் அன்பின் உறுதிப்பாடு உலகின் எல்லா அச்சங்களையும் வெற்றிகொள்ளக்கூடியது, மற்றும் கடவுள் மீது நாம் கொள்ளும் நம்பிக்கை, உலக அச்சங்களை மேற்கொள்ள உதவுகிறது என்று பேராயர்களிடம் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகின் அச்சங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் பாதுகாப்பு, இவ்வுலகம் தருவதல்ல, மாறாக இயேசுவின் அடைக்கலத்திலிருந்து கிட்டுவது எனவும் கூறினார்.
இயேசுவை மறுதலித்து, பின் தன் தவறை உணர்ந்து, தன் பலவீனத்தை ஏற்றுக்கொண்ட புனித பேதுரு, இயேசுவிடம் தன்னை முற்றிலுமாக கையளித்ததைப்பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, 'என்னைப்பின் செல்' என, தான் உயிர்த்த பின்னர், இயேசு பேதுருவிடம், கூறிய இவ்வார்த்தைகள் நம் ஒவ்வொருவருக்கும் கூறப்படும் வார்த்தைகள் என்றார்.
வீணான விடயங்களில் நேரத்தைச் செலவிடாமல், எதிர்வரும் இடர்பாடுகளைக் குறித்துக் கவலைப்படாமல், நற்செய்தி அறிவிப்பதிலேயே முழுக்கவனம் உடையவர்களாக, இயேசுவைப் பின்செல்பவர்களாக, ஒவ்வோர் ஆயரும் இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.