2014-06-28 16:43:11

மடகாஸ்கர் அரசுத்தலைவர், திருத்தந்தை சந்திப்பு


ஜூன்,28,2014. மடகாஸ்கர் நாட்டுத் அரசுத்தலைவர் Hery Rajaonarimampianina அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் மடகாஸ்கர் அரசுத்தலைவர் Rajaonarimampianina.
மடகாஸ்கர் நாட்டுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் பற்றிய திருப்தியும், அந்நாட்டின் தேசிய ஒப்புரவுக்கும், ஏழ்மை ஒழிப்புக்கும், சமூக சமத்துவமின்மையைக் களைவதற்கும், கல்வி மேம்பாட்டுக்கும், சமூக நலவாழ்வுக்கும் தலத்திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள் பற்றிய பாராட்டும் இச்சந்திப்புக்களில் தெரிவிக்கப்பட்டன என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
உள்நாட்டு அளவில் இடம்பெறும் சண்டைகள், பன்னாட்டு விவகாரங்கள் போன்றவையும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என, அப்பத்திரிகை அலுவலகம் மேலும் கூறியது.
உலகின் பெரிய நான்காவது தீவு நாடாகிய மடகாஸ்கர், இந்தியப் பெருங்கடலில் தென்கிழக்கு ஆப்ரிக்கக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இத்தீவு நாடு தனித்து அமைந்துள்ளதால், இங்குள்ள பெரும்பாலான பாலூட்டிகள், பெரும்பாலான தாவரங்கள், பறவையினங்களில் பாதியளவு ஆகியவை இப்பூமியில் வேறெங்கும் காணப்படவில்லை.
உலகின் முதல் பெரிய தீவு நாடு கிரீன்லாந்து ஆகும். இதற்கு அடுத்தபடியாக நியு கினி, பொர்னேயு ஆகிய தீவு நாடுகள் பெரியவையாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.