2014-06-28 16:43:05

திருத்தந்தை பிரான்சிஸ் : முழுமையான கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவனின் கொடை


ஜூன்,28,2014. தூய ஆவியால் உந்தப்பட்டு நாம் அனைவரும் ஒருவரையொருவர் இறைவனில் பார்ப்பதற்குக் கற்றுக்கொண்டால், நமது பாதை மேலும் நேரானதாகவும், நம் அன்றாட வாழ்வின் பல நிலைகளில் நம் ஒத்துழைப்பு மேலும் எளிதானதாகவும் அமையும் என, கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பிரதிநிதிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களின் பிரதிநிதிகள் குழுவை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
முழுமையான கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவனின் கொடை எனவும், தூய ஆவியின் வல்லமையால், விசுவாசக் கண்கொண்டு ஒருவர் மற்றவரை இறைவனில் பார்க்கும்போது இந்த ஒன்றிப்பை அடைவதற்கான அருளை இறைவன் இப்போதுகூட நமக்கு அருளுகிறார் எனவும் கூறினார் திருத்தந்தை.
இவ்வாறு பார்க்க வைக்கும் சிந்தனையானது ஒன்றிப்புப் பாதையில் நம்மை மேலும் அதிகமதிகமாய் இட்டுச்செல்லும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்த திருத்தந்தை, நாம் அனைவரும் தூய ஆவியின் செயல்களுக்குத் திறந்த உள்ளம் கொண்டவர்களாய் இருக்க வேண்டியது அவசியம் எனவும் கேட்டுக்கொண்டார்.
திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களும், கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை முதலாம் அத்தனகோரஸ் அவர்களும், எருசலேம் புனித நகரில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்ததை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் புனித பூமியிலும், பின்னர் வத்திக்கானிலும் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்புக்களையும் மகிழ்வோடு குறிப்பிட்டார்.
புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவையொட்டி கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தையின் பிரதிநிதிகள் குழு வத்திக்கானுக்கு வருகை தருவதும், புனித அந்திரேயா விழாவன்று வத்திக்கான் பிரதிநிதிகள் குழு கான்ஸ்டான்டிநோபிள் செல்வதும் வழக்கத்தில் உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.