2014-06-28 16:43:45

சூடானில் மீண்டும் கைது செய்யப்பட்ட கத்தோலிக்கப் பெண் விடுதலை


ஜூன்,28,2014. சூடானில் இஸ்லாம் மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு மாறிய குற்றத்துக்காக முதலில் மரணதண்டனை தீர்ப்பிடப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டு, பின்னர், போலியான பயண ஆவணங்கள் வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்ட கத்தோலிக்கப் பெண் ஒருவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பிணையலில் விடுதலை செய்யப்பட்டுள்ள 26 வயது நிரம்பிய மிரியம் இப்ராஹிம் என்ற கத்தோலிக்கப் பெண் தனது குடும்பத்தோடு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் என்றும், அவரின் குடும்பம் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்பதற்கு சூடான் அரசு உறுதியளித்துள்ளது என்றும் சூடான் அரசுத் துறையின் பேச்சாளர் Marie Harf கூறியுள்ளார்.
மிரியம் இப்ராஹிமுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருந்தபோதிலும் அவர் தனது விசுவாசத்தை மறுதலிக்க மறுத்துவிட்டார் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
அமெரிக்க ஐக்கிய நாட்டு குடிமகன் Daniel Bicensio Wani என்பவரை கடந்த 2011ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்வதற்கு முன்னர் கத்தோலிக்கராக மாறினார் இப்ராஹிம். இவர்களின் ஒரு வயது ஆண் குழந்தையும் தாயோடு சிறையில் இருந்தது. இப்ராஹிம் கடந்த மே மாதத்தில் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.
சூடான் குற்றவியல் சட்டப்படி, முஸ்லிம்கள் பிற மதத்திற்கு மாறினால் அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதன்படி இப்ராஹிம் தூக்கிலிடப்பட வேண்டுமென கடந்த மே மாதத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனையொட்டி சூடான் கார்ட்டூம் உயர்மறை மாவட்ட முதன்மை குரு உட்பட அனைத்துலக மனித உரிமை ஆர்வலர்கள் இத்தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு சூடான் அரசைக் கேட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.