2014-06-28 16:43:33

ஈராக்கில் கிறிஸ்தவர்களைக் காப்பாற்றுங்கள், மொசூல் பேராயர் வேண்டுகோள்


ஜூன்,28,2014. ஈராக்கில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்றான Qaraqosh நகரம், சுன்னிப் பிரிவு இஸ்லாம் தீவிரவாத அமைப்பின் தாக்குதல்களால் பேய் நகரம்போன்று காட்சியளிக்கின்றது என்று சொல்லி, அங்குள்ள கிறிஸ்தவர்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்துலக சமுதாயத்தின் உதவியைக் கேட்டுக்கொண்டுள்ளார் மொசூல் பேராயர் Yohanna Petros Moshe.
ISIL என்ற சுன்னிப் பிரிவு இஸ்லாம் தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்த்துப் போரிடுவதற்காக குர்த் இன புரட்சியாளர்கள் கடந்த இரு நாள்களாக Qaraqosh நகரத்தில் ஆயுதங்களையும், புதிய படைகளையும் குவித்துக் கொண்டிருப்பதால் கிறிஸ்தவர்கள் அந்நகரைவிட்டு வெளியேறி வருகின்றனர் என்றும் பேராயர் Moshe கூறியுள்ளார்.
Qaraqosh நகரத்தைக் காப்பாற்றும்பொருட்டு, போரிடும் இரு தரப்புகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தையை நடத்த பேராயர் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை என்றும், சுன்னிப் பிரிவு தீவிரவாதிகள், குர்த் இன புரட்சியாளர்களை அவ்விடத்தைவிட்டு வெளியேறுமாறு வற்புறுத்தி வருகின்றனர் என்றும் பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.
எர்பில் மற்றும் பிற குர்த் இனத்தவர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் அடைக்கலம் தேடியுள்ளனர் என அனைத்துலக குடியேற்றதாரர் நிறுவனம் அறிவித்தது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.