2014-06-27 16:02:40

ரெய்ப்பூர் பேராயர் தாகூர் திருத்தந்தையிடமிருந்து பால்யம் பெறுகின்றார்


ஜூன்,27,2014. இந்தியாவின் ரெய்ப்பூர் பேராயர் விக்டர் ஹென்ரி தாகூர் உட்பட உலகின் பல நாடுகளைச் சார்ந்த 24 பேராயர்கள், பால்யம் என்ற கழுத்துப் பட்டையை வருகிற ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து பெறவுள்ளார்கள்.
புனிதர்கள் பேதுரு பவுல் விழாவாகிய ஜூன் 29ம் தேதியன்று உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெருவிழாத் திருப்பலி நிகழ்த்தி உலகின் 24 பேராயர்களுக்கு, கழுத்துப் பட்டைகளை அணிவிப்பார்.
இந்தியாவின் ரெய்ப்பூர் பேராயர் தாகூர், பாகிஸ்தானின் லாகூர் பேராயர் செபாஸ்டியான் பிரான்சிஸ் ஷா, இன்னும், பிலிப்பைன்சிலிருந்து இருவர், வியட்நாமிலிருந்து ஒருவர், இந்தோனேசியாவிலிருந்து ஒருவர் என, இந்த 24 பேரில் ஆறு பேர் ஆசிய நாடுகளைச் சார்ந்தவர்கள்.
இந்த 24 பேரும் 2013ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 2014ம் ஆண்டு மே மாதம் வரை புதிய பேராயர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள். இந்த 24 பேராயர்கள் தவிர, இக்காலக் கட்டத்தில் பேராயர்களாக நியமனம் செய்யப்பட்ட மியான்மார் நாட்டின் Mandalay பேராயர் உட்பட மூவர் வருகிற ஞாயிறு நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அவரவர் உயர் மறைமாவட்டங்களில் பால்யங்களைப் பெறுவார்கள்.
நல்ல ஆயராம் கிறிஸ்துவின் அடையாளமாக இருக்கும் செம்மறி ஆட்டுக் குட்டியின் உரோமத்திலிருந்து பால்யம் தயாரிக்கப்படுகின்றது. முக்கிய விழாக்களின்போது திருப்பலி உடைக்கு மேலே பேராயர்கள் அணியும் பால்யம் என்ற கழுத்துப் பட்டை, திருப்பீடத்தால் பேராயர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் குறிப்பதாய் உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.