2014-06-26 16:43:11

திருத்தந்தை பிரான்சிஸ் : உலகின் எல்லாப் பகுதியினருக்கும் அறிவியல் ஆய்வுகள் நடத்துவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்


ஜூன்,26,2014. வத்திக்கான் வானியல் ஆய்வு மையம் நடத்திய கோடைகால பயிற்சிப் பாசறையில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மாணவர்கள் என 35 பேரை இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்கின்ற மக்கள் ஆய்வுகள் நடத்துவதற்கும், அறிவியல் துறையில் பயிற்சிகள் பெறுவதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற தனது ஆவலை வெளியிட்டார்.
பல்வேறு நாடுகள் மற்றும் பல்வேறு மதங்களின் பின்னணிகளைக் கொண்டிருக்கும் இம்மாணவர்கள், உரையாடலுக்கும், பலனுள்ள ஒத்துழைப்புக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் உள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
திருஅவை அறிவியலுடன் உரையாடல் நடத்துவதற்கு தன்னை அர்ப்பணித்துள்ளதற்கான காரணத்தை விளக்கிய திருத்தந்தை, அறிவின் எல்லைகளை விரிவாக்கவும், வளப்படுத்தவும் விசுவாசத்தால் இயலும் என்ற கருத்தில் திருஅவை உறுதியாய் இருப்பதே இதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.
நமது தொடக்கங்கள் பற்றிய உலகளாவிய கேள்விகளுக்கான தேடல், அன்புத் தந்தையாம் படைத்தவரோடு சந்திப்பை ஏற்படுத்துவதற்கு நம்மை இட்டுச்செல்ல வேண்டும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“வானிலுள்ள பால்மண்டலம் : அருகிலும் தூரத்திலும், இளையோரும் முதியோரும்” என்ற தலைப்பில் வத்திக்கான் வானியல் ஆய்வு மையம் கோடைகால பயிற்சிப் பாசறையை நடத்தியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.