2014-06-25 16:46:27

நெருக்கடிகளுக்கு மத்தியில் குடும்பங்கள் தங்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன, வத்திக்கான் அதிகாரி


ஜூன்,25,2014. கடந்த கால மற்றும் தற்போதைய நெருக்கடிகள் குடும்பங்களுக்கு முன்வைக்கும் சவால்களுக்கு மத்தியில், உலகெங்கும் பல குடும்பங்கள் தங்களின் பாரம்பரியப் பண்புகளில் தொடர்ந்து உறுதியாக இருப்பது மனித சமுதாயத்தின் அடிப்படை ஒற்றுமையை வெளிப்படுத்துவதாய் உள்ளது என, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் அவையில், குடும்பம் குறித்து இச்செவ்வாயன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் இவ்வாறு கூறினார்.
தனிநபரின் வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சியின் முயற்சிகளுக்கும், பாரம்பரியக் குடும்பங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை வலியுறுத்திப் பேசிய பேராயர் தொமாசி, சுதந்திரமான மற்றும் மகிழ்ச்சியான சமுதாயத்துக்கும், தனிநபரின் விடுதலை வாழ்வுக்கும் குடும்பம் தடையாக இருப்பதாகச் சொல்லி அதனைக் கலைக்க பல சக்திகள் முயற்சிப்பதையும் குறிப்பிட்டார்.
ஓரினச் சேர்க்கை திருமணங்களை அங்கீகரிப்பதற்கு பல நாடுகள் முயற்சித்துவரும் இக்காலத்தில், நல்லதொரு குடும்பச் சூழலில் குழந்தை நன்றாக வளரும் என்பதற்கு, பாரம்பரியக் குடும்பங்கள் சான்றாக உள்ளன என்றும், குடும்பமும் திருமணமும் நாடுகளில் மட்டுமல்லாமல், உலகனைத்திலும் பாதுகாக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் பேராயர் தொமாசி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.