2014-06-25 16:46:35

சிரியா அகதிகளால் லெபனன் எதிர்நோக்கும் சவால்கள், விளக்குகிறார் லெபனன் திருப்பீடத் தூதர்


ஜூன்,25,2014. வேறு எந்த நாட்டையும்விட அதிகமான சிரியா அகதிகளைக் கொண்டிருக்கும் லெபனன் நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வகையில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது என, லெபனன் நாட்டு திருப்பீடத் தூதர் பேராயர் Jain Mendez வத்திக்கான் வானொலியில் தெரிவித்தார்.
சிரியாவின் அண்டை நாடான லெபனனில் தற்போது 10 இலட்சத்துக்கு மேற்பட்ட சிரியா அகதிகள் உள்ளனர் எனவும், ஈராக்கில் அண்மையில் ISIS இஸ்லாமிய புரட்சியாளர்களின் வன்முறை அதிகரித்து வருவது லெபனன் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் பேராயர் Mendez மேலும் கூறினார்.
ஈராக்கில் நடந்துவரும் வன்முறைகள் மத்திய கிழக்கின் உறுதியான தன்மைக்கு மேலும் அச்சுறுத்தலை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்த பேராயர் Mendez அவர்கள், ஏறக்குறைய 45 இலட்சம் மக்களைக் கொண்ட சிறிய நாடாகிய லெபனனுக்கு மேலும் மேலும் அகதிகள் வந்துகொண்டிருப்பது, லெபனனின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஈராக்கில் சரியான ஆவணங்கள் இன்றி சிக்கியிருக்கும் ஏறக்குறைய அறுபதாயிரம் நேபாள மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேற உதவுமாறு நேபாள அரசு பல்சமயத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி/AsiaNews







All the contents on this site are copyrighted ©.