2014-06-25 16:47:40

சட்டத்துக்குப் புறம்பேயான சுற்றுச்சூழல் குற்றங்கள், ஆயுதக் குழுக்களுக்கு நிதியுதவி செய்கின்றன, ஐ.நா.


ஜூன்,25,2014. உலக அளவில் இடம்பெறும் சுற்றுச்சூழல் தொடர்புடைய குற்றங்கள், நிதி ஊழல் குற்றக்கும்பல்கள், புரட்சிக்குழுக்கள், பயங்கரவாதக் குழுக்கள் ஆகியவற்றுக்கு ஆண்டுக்கு இருபதாயிரம் கோடி டாலருக்கு மேலான நிதியுதவி செய்கின்றன என்று, ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பும், INTERPOL அமைப்பும் இணைந்து வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
நைரோபியில் இவ்வாரத்தில் தொடங்கியுள்ள முதல் ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், சுற்றுச்சூழல் தொடர்புடைய குற்றங்கள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன எனக் கூறப்பட்டுள்ளது.
காடுகளில் மரங்கள் வெட்டப்படுதல் உட்பட்ட இக்குற்றங்கள் சுற்றுச்சூழலில் உடனடி தாக்கங்களை ஏற்படுத்துவதோடு, சட்டத்துக்குப் புறம்பே நடத்தப்படும் இயற்கை வள வணிகம், வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் கோடிக்கணக்கான டாலர் இழப்பையும் உண்டுபண்ணுகின்றன எனவும் குறைகூறியுள்ளது அவ்வறிக்கை.
சட்டத்துக்குப் புறம்பே மரங்கள் வெட்டப்படுதல் உட்பட இயற்கை வளங்களைச் சுரண்டுதல் தொடர்புடைய குற்றங்களால் ஆண்டுக்கு 3,000 கோடி டாலர் முதல் 10,000 கோடி டாலர் வரை வருவாய் கிடைக்கின்றன. இது, உலகளாவிய மொத்த மர வணிகத்தில் 10 முதல் 30 விழுக்காடாகும் எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.