2014-06-25 16:47:53

கங்கையில் ஒருமுறை நீராடினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு


ஜூன்,25,2014. இந்தியாவின் புனித நதிகளுள் ஒன்றான கங்கை நதியில், நீராடினால், புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பாபா அணு ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கங்கை நதி நீரின் தூய்மைத்தன்மை குறித்து, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின்கீழ் செயல்படும் நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறை, கடந்த ஆண்டில் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, கங்கை நதி நீரில், புற்றுநோய்களை உருவாக்கும் கார்சினோஜன்கள் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், கங்கை நதி இந்தளவிற்கு மாசு அடைந்திருப்பதற்கு, தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் கங்கையில் நேரடியாக கலப்பதே முக்கிய காரணம் என்றும், இக்கழிவுகளில், புற்றுநோயை உண்டாக்கும் நச்சுப்பொருட்கள் அதிகளவில் உள்ளன என்றும் அவ்வாய்வு கூறுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளா நிகழ்ச்சியின்போது இக்குழு நடத்திய ஆய்வில், தண்ணீரில், குரோமியம் 6 இருப்பது தெரியவந்தது. இது மிகுந்த வீரியமுள்ள நச்சுப்பொருள் ஆகும். 1 மி.லி. தண்ணீரில், 1 என்.ஜி. அளவிற்கு குரோமியம் 6 இருப்பது கண்டறியப்பட்டது, இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட 50 மடங்கு அதிகமாகும்.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.