2014-06-24 15:32:06

விவிலியத் தேடல் – மினா நாணய உவமை – பகுதி - 4


RealAudioMP3 கடந்த விவிலியத் தேடலில், 'மினா நாணய உவமை'யின் முதல் பகுதியில் நம் தேடலை மேற்கொண்டோம். உயர் குடிமகன் ஒருவர், 10 பணியாளர்களை அழைத்து, 10 மினா நாணயங்கள், அதாவது, 1000 நாட்களுக்குரிய ஊதியத்தை அவர்களுக்குத் தந்து, வாணிகம் செய்யச் சொன்னார் என்பதைச் சிறிது ஆழமாகப் பார்த்தோம். அந்தப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டிருந்தால், அந்த 1000 நாள் ஊதியத்தை ஒரு சேர முதலீடு செய்து அதன் பலனை, பத்துப்பேரும் அனுபவித்திருக்கலாம் என்ற பாணியில் சிந்தித்தோம். ஆனால், பத்துப் பணியாளர்களும் தங்கள் சுய இலாபத்தைப் பெருக்குவதில் குறியாக இருந்ததால், ஆளுக்கொரு மினா நாணயம் என்று பிரித்துக்கொண்டனர் என்றும் சிந்தித்தோம்.
உலகம் என்ற கூட்டுக் குடும்பத்தில் பிறந்த நாம் அனைவருமே உடன்பிறந்தோர் என்ற உணர்வுடன், இந்த உலகம் என்ற பொதுச் சொத்தைப் பாதுகாக்க, பராமரிக்க அழைக்கப்பட்டவர்கள் என்பது விவிலியத்தில் நாம் அடிக்கடி காணும் கருத்து. அனைத்து உண்மையான மதங்களிலும் இதே கருத்து வலியுறுத்தப்படுகின்றது. எனினும், மதங்கள் சொல்லித்தரும் இந்த உன்னதமான எண்ணங்களுக்கு முற்றிலும் எதிராக, சுயநலக் கோட்டைகளை எழுப்பும்படி இவ்வுலகம் நமக்குச் சொல்லித் தரும் பாடங்களே நம் மனங்களில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன.
இந்தச் சுயநலப் பாடங்களின் விபரீதங்கள் சென்ற வாரம் செய்தி வடிவில் வெளியாயின. சுயநலச் சிகரத்தை அடைந்த செல்வந்தர்களின் பட்டியலை ஒவ்வோர் ஆண்டும் Forbes என்ற வர்த்தக இதழ் வெளியிட்டு வருகிறது. உலகில் இன்று வாழும் கோடீஸ்வரர்களின் பட்டியல் அண்மையில் வெளியானது. இந்தப் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, சொத்துக்களை மதிப்பிடும் Knight Frank என்ற பொருளாதார நிறுவனம் ஒரு சில கணிப்புக்களை வெளியிட்டுள்ளது. இக்கணிப்புக்கள் நம் மனதைச் சங்கடப்படுத்துகின்றன.
2003ம் ஆண்டு துவங்கி, 2013ம் ஆண்டு முடிய உள்ள 10 ஆண்டுகளில், உலகில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒப்பிடப்பட்டுள்ளது. இதே பாணியில் இவ்வுலகம் 'வளர்ச்சி' அடைந்தால், 2023ம் ஆண்டு கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை எவ்வாறு இருக்கும் என்ற கணிப்பும் தரப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் ஆய்வுப்படி, 2003ம் ஆண்டு, உலகில் 100 கோடி டாலர்களுக்கும் அதிகமாகச் சொத்து சேர்த்துள்ள 'பில்லியனர்' என்று சொல்லப்படும் கோடீஸ்வரர்கள் 935 பேர் இருந்தனர். 2013ம் ஆண்டு, இவர்களின் எண்ணிக்கை 1682ஆக உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் 750க்கும் அதிகமானோர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். இதே பாணியில் சென்றால், 2023ம் ஆண்டில் 2315 கோடீஸ்வரர்கள் இவ்வுலகில் இருப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலகில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கூடுகிறது என்பது மகிழ்வான செய்திதானே. அவரவர் தங்கள் திறமைக்கேற்ப செல்வம் சேர்ப்பதைப் பற்றி நாம் ஏன் வருத்தப்படவேண்டும், சங்கடப்பட வேண்டும் என்ற கேள்விகள் எழலாம்.
Knight Frank என்ற பொருளாதார நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தக் கணிப்பில், 2003, 2013, 2023 என்ற மைல்கற்களை வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதையும், இதே பாணியில் உலக வளர்ச்சி இருந்தால், இவர்களின் எண்ணிக்கை இன்னும் கூடும் என்பதையும் இந்த ஆய்வு சொல்கிறது.
இங்கு கூறப்படும் 'பாணி', 'வளர்ச்சி' என்பன நம்மைச் சங்கடப்படுத்தும் வார்த்தைகள். சிறிது ஆழமாக ஆய்வு செய்தால், இங்கு கூறப்பட்டுள்ள வளர்ச்சி உண்மையிலேயே வளர்ச்சி அல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம். 2003 மற்றும் 2013 என்ற இவ்விரு ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் உலகெங்கும் பொதுவாகவே பொருளாதாரம் பெருமளவு சரிந்துள்ளது. பலகோடி மக்கள் வேலையின்றி வீடு திரும்பும் நிலை, பலகோடி குடும்பங்கள் பட்டினியுடன் படுக்கச் செல்லும் அவலம் என்பவை கடந்த பத்தாண்டுகளில் தொடர் கதையாக நீடிக்கிறது.
ஜூன் 12, La Vanguardia என்ற இஸ்பானிய நாளிதழுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அளித்துள்ள ஒரு பேட்டியில், தற்போதைய பொருளாதாரப் பாணி மாறாவிடில் நாம் அனைவரும் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார். பணம் என்ற பொய் கடவுளின் வழிபாடு, அளவுகடந்த பேராசை, தூக்கி எறியும் கலாச்சாரம் இவற்றின் அடிப்படையில் எழுந்துள்ள இந்தப் பொருளாதாரம், இவ்வுலகை அழிவுப்பாதையில் இட்டுச்செல்கிறது என்று திருத்தந்தை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருத்தந்தையின் எச்சரிக்கை வெளியான அதே ஜூன் 12ம் தேதி, Economy என்ற இதழில் வெளியான ஒரு சங்கடமான செய்தியில், ‘வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் 10,000 'பொருளாதாரத் தற்கொலைகள்’ (Global recession linked to 10,000 ‘economic suicides’ across North America and Europe: study) என்று கூறப்பட்டுள்ளது. திருத்தந்தையின் நேர்காணலும், பொருளாதாரத் தற்கொலைகள் என்ற செய்தியும் வெளியானதற்கு அடுத்த நாள், Knight Frank என்ற பொருளாதார நிறுவனம் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது, இனியும் உயர்ந்துவரும் என்று கூறியது. இவை அனைத்தையும் இணைத்து சிந்திக்கும்போது, மனம் சங்கடப்படாமல், மகிழ முடியுமா?
2003ம் ஆண்டிலிருந்து பத்தாண்டுகள் உலகின் பல கோடி மக்கள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளனர் என்பதையும், இதனால், தற்கொலைகளின் எண்ணிக்கை, அதிலும் குறிப்பாக, இளையோரின் தற்கொலை எண்ணிக்கை கூடியுள்ளது என்பதையும், அதே பத்தாண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது என்பதையும் சிந்திக்கும்போது, இவ்விரு நிலைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை யாரும் புரிந்துகொள்ள முடியும். உலகில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க, வறியோரின் எண்ணிக்கையும் தற்கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது தெளிவாகப் புரியும்.
பல நூறு கோடி மக்களைச் சென்றடைய வேண்டிய செல்வத்தை ஒரு சிலர் தங்கள் தனிப்பட்ட உடைமைகளாக மாற்றி, பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கு உரிமையாளர்களாக மாறியதால், இவ்வுலகம் பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது என்பதுதானே உண்மை?
'மினா நாணய உவமை'யில் நாம் சந்திக்கும் 10 பணியாளர்கள் மத்தியில் நிகழ்ந்ததும் இதுதானே! தலைவன் தங்களுக்குப் பொதுவாக தந்த பணத்தை ஒன்றாக இணைந்து முதலீடு செய்து, வாணிகம் செய்திருந்தால், தலைவன் திரும்பி வந்தபோது, அனைவரும் இணைந்து தாங்கள் பெற்ற பலனுக்குக் கணக்கு கொடுத்திருப்பர். ஆனால், அவரவர் தங்கள் சுயநலத்தால் உந்தப்பட்டு, தனித்தனியே பிரிந்ததால், பேராசை, போட்டி ஆகியவை உருவாயின.
இறைவன் நம் அனைவருக்கும் பொதுவாகத் தந்திருக்கும் உலகம் என்ற பொதுச் சொத்தை நாம் அனைவரும் இணைந்து நிர்வகித்தால், அனைவருமே பயனடைய வழிகள் உண்டு. இருப்பினும், ஒரு சிலரது சுயநலத்தால், குறிப்பிட்டுச் சொல்லப்போனால், 1682 பெரும் கோடீஸ்வரர்களின், இன்னும் பல்லாயிரம் பெரும் செல்வந்தர்களின் சுயநலத்தால் பல்லாயிரம் கோடி மக்கள் பசியால், அல்லது தற்கொலையால் உயிரிழக்கும் அவலம் இவ்வுலகில் தொடர்கதையாகிறது. இந்த உவமையின் முதல் பகுதியும், சென்ற வாரம் நாம் கண்ட செய்திகளும், குறிப்பாக, திருத்தந்தை விடுத்துள்ள எச்சரிக்கையும் நம் சுயநலத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.
இந்த உவமையின் கருவான இரண்டாம் பகுதியில் நாம் காண்பது இதுதான்:
லூக்கா நற்செய்தி 19: 15-26
உயர் குடிமகன்... தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார். முதலாம் பணியாளர் வந்து, “ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்” என்றார். அதற்கு அவர் அவரிடம், “நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்” என்றார். இரண்டாம் பணியாளர் வந்து, “ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன்” என்றார். அவர், “எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்” என்று அவரிடமும் சொன்னார். வேறொருவர் வந்து, “ஐயா, இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர்; நீர் விதைக்காததை அறுக்கிறவர்” என்றார். அதற்கு அவர் அவரிடம், “பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன்; வைக்காததை எடுக்கிறவன்; விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா? அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே” என்றார். பின்பு அருகில் நின்றவர்களிடம், “அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்” என்றார். அதற்கு அவர்கள், “ஐயா, அவரிடம் பத்து மினாக்கள் இருக்கின்றனவே” என்றார்கள். அவரோ, “உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் என உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
பத்துப் பணியாளர்களில் மூவரிடம் கணக்கு கேட்கப்படுகிறது. இந்த மூவரின் வழியே இயேசு நமக்குச் சொல்லித் தரும் பாடங்களை அடுத்த வாரம் தேடுவோம்.

விவிலியத் தேடல் நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கியது வத்திக்கான் வானொலி.








All the contents on this site are copyrighted ©.