2014-06-24 15:52:13

பிளாஸ்டிக் கழிவுப் பொருள்கள் கடல்களின் சுற்றுச்சூழலுக்கு, ஆண்டுதோறும் 1,300 கோடி டாலர் இழப்பை ஏற்படுத்துகின்றன, ஐ.நா.


ஜூன்,24,2014. கடல் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்கள் குவிந்துவருவது, கடல்சார் வாழ்வு, சுற்றுலா, மீன்பிடித்தொழில், வணிகம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலை முன்வைக்கின்றது என்று ஐ.நா. சுற்றுச்சூழல் கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.
இத்திங்களன்று தொடங்கிய ஐ.நா. சுற்றுச்சூழல் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் ஆண்டு அறிக்கையில், கடல்பகுதிகளில் குவிந்துவரும் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்கள், கடல்களின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு, ஆண்டுதோறும் 1,300 கோடி டாலர் இழப்பை ஏற்படுத்துகின்றன என்று கூறப்பட்டது.
இக்கால நவீன வாழ்வில், பிளாஸ்டிக் பொருள்கள் முக்கிய இடத்தைக் கொண்டுள்ளன என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்றாலும், இவை சுற்றுச்சூழலுக்கு முன்வைக்கும் அச்சுறுத்தலை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்று UNEP செயல்திட்ட இயக்குனர் Achim Steiner தெரிவித்தார்.
பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்துவது உட்பட அப்பொருள்களை நன்றாக நிர்வகிப்பதன் மூலம், பிளாஸ்டிக் நிறுவனங்கள் ஆண்டுதோறும் 400 கோடி டாலரை மிச்சப்படுத்தினாலும், இத்தகைய நூறு நிறுவனங்களில் பாதி நிறுவனங்களே இவ்வாறு செயல்படுகின்றன என்றும் Steiner தெரிவித்தார்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.