2014-06-24 15:51:23

திருத்தந்தை பிரான்சிஸ்: திருமுழுக்கு யோவான் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு எடுத்துக்காட்டு


ஜூன்,24,2014. திருமுழுக்கு யோவான், இறைவாக்கினர்களில் எல்லாம் மிகப்பெரிய இறைவாக்கினர் என்று சொல்லி, இவர் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு எடுத்துக்காட்டாய் உள்ளார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவாகிய இச்செவ்வாயன்று வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னேற்பாடு செய், தெளிவாக உய்த்துணர், தாழ்த்து ஆகிய மூன்று சொற்களில் புனித திருமுழுக்கு யோவானின் அழைப்பை விளக்கினார்.
தமக்கென எந்த மகிமையையும் எடுத்துக்கொள்ளாது இயேசுவின் வழியைத் தயார் செய்த மனிதர் புனித திருமுழுக்கு யோவான் என்றும், இவர் சக்திவாய்ந்த போதகராக இருந்ததால் மக்கள் அவரைத் தேடிச்சென்று பின்பற்றினர் என்றும் கூறினார் திருத்தந்தை.
அதேசமயம், அவரை மெசியாவா என்று மக்கள் கேட்டதற்கு, ஆண்டவரின் வழியைத் தயார்செய்வதற்கு வந்த வெறும் ஒரு குரல் என்று புனித திருமுழுக்கு யோவான் பதிலளித்தார் என்று உரையாற்றிய திருத்தந்தை, பலர் மத்தியில் உண்மையான மெசியா யார் என்பதை தெளிவாக உய்த்துணருவதற்கு இப்புனிதர் அழைப்புப் பெற்றிருந்தார் என்று கூறினார் திருத்தந்தை.
இயேசுவைப் பற்றி புனித திருமுழுக்கு யோவான் கற்பனை செய்திருந்ததற்கும், இயேசு நடந்துகொண்டதற்கும் மிகுந்த வேறுபாடு இருந்ததால், இவர் பெற்றிருந்த மூன்றாவது அழைப்பு மிகவும் கடினமான ஒன்று எனவும், தனது சந்தேக இருளிலும் இப்புனிதர் தமது மரணத்தால் தம்மைத் தாழ்த்தினார் எனவும் திருத்தந்தை கூறினார்.
கிறிஸ்தவர்களாகிய நாமும் ஆண்டவரின் வழியைத் தயார் செய்ய வேண்டும், உண்மையைத் தெளிவாக உய்த்துணர வேண்டும், நம் இதயங்களிலும், பிறரின் ஆன்மாக்களிலும் ஆண்டவர் வளரும்படியாக நம்மை நாம் தாழ்த்த வேண்டும் என, தனது இச்செவ்வாய்த் திருப்பலி மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.