2014-06-23 15:51:45

திருத்தந்தை பிரான்சிஸ் : மாஃபியா உறுப்பினர்கள் தீமையை வழிபடுபவர்கள்


ஜூன்,23,2014. இத்தாலிய மாஃபியா திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்களால் நடத்தப்படும் வஞ்சகச் செயல்களையும் வன்முறைகளையும் இச்சனிக்கிழமை மாலையில் கண்டித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் இத்தாலியில் மாஃபியா குற்றங்கள் அதிகமாக இடம்பெறும் கலாபிரியா மாநிலத்துக்கு, ஜூன் 21, இச்சனிக்கிழமையன்று ஒருநாள் திருப்பயணத்தை மேற்கொண்டு, அன்று மாலை நிகழ்த்திய திருப்பலி மறையுரையில், மாஃபியா உறுப்பினர்கள் தீமையை வழிபடுபவர்கள் என்று குறை கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவழிபாடு, பணவழிபாட்டால் ஈடுகட்டப்படும்போது பாவத்தின் பாதை ஒருவரின் சொந்த ஆதாயங்களுக்கு வழி திறக்கிறது என்றும், ஒருவர் இறைவனை வழிபடாமல் இருக்கும்போது, வஞ்சகச் செயல்களிலும் வன்முறைகளிலும் வாழும் மனிதரைப் போன்று தீமையை வழிபடுபவராக மாறுகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
கலாபிரியா மாநிலத்தின் சிபாரியில் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அழகான உங்கள் பூமி, மாஃபியா பாவத்தின் விளைவுகளின் அடையாளங்களை அறிந்திருக்கின்றது எனவும், Ndrangheta என்ற பெயரில் இயங்கும் கலாபிரியா மாஃபியா, தீமையை வழிபடுகின்றது மற்றும் பொதுநலனை வெறுக்கின்றது எனவும் கூறினார்.
இந்தத் தீமைக்கு எதிராய்ப் போராட வேண்டும் மற்றும் இத்தீமை வெளியேற்றப்பட வேண்டுமெனவும், இந்தத் தீமையின் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்கள் இறைவனோடு ஒன்றிணையாதவர்கள், அவர்கள் புறம்பாக்கப்பட்டவர்கள் எனவும் உரையாற்றினார் திருத்தந்தை.
இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழா திருப்பலியை நிகழ்த்திய திருத்தந்தை, இறைவனை மட்டும் வழிபடுவதை மையமாக வைத்து தனது மறையுரையை வழங்கினார்.
தென் இத்தாலியில் நேப்பிள்ஸ் பகுதியில் Camorra, சிசலிப் பகுதியில் Cosa Nostra, கலாபிரியா பகுதியில் Ndrangheta ஆகிய பெயர்களில் மாஃபியா அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.