2014-06-20 16:02:01

புனிதரும் மனிதரே - விசுவாசத்திற்காக வீரச்சாவை ஏற்ற சிறுவன்


கிறிஸ்துவின் மீது மிகுந்த பக்திகொண்ட பங்கிராஸ் தனது 14 ஆம் வயதிலேயே டயக்ளீசியன் காலத்தில் கொடிய சித்ரவதைக்கும், சாவுக்கும் உள்ளானார்.
கிறிஸ்துவை நெருங்கிப் பின்பற்றிய பங்கிராசின் மாமா டெனிஸ் இவரை வளர்த்தார். நாளடைவில் டெனிஸ் கிறிஸ்துவுக்காக சிறையில் அடைக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு இறந்தார். புனித பங்கிராஸ் உரோமையில் மறைசாட்சியாக இறந்தார். 508 ஆம் ஆண்டு திருத்தந்தை சிக்மாக்கஸ் இவரது கல்லறைமீது ஒரு பேராலயம் எழுப்பினார். இப்புனிதரின் கல்லறை உரோமில் உள்ளது. பங்கிராஸின் வாழ்க்கை வரலாற்றில் நமக்கு கிடைக்கும் தகவல் மிக மிக குறைந்ததே. ஆயினும், விசுவாசத்தில் வீரச்சாவு வரைக்கும் அவர் காட்டிய பற்றுறுதி அன்று முதல் இன்று வரை ஓர் உயர்ந்த எடுத்துக்காட்டாக உள்ளது. 289ம் ஆண்டு பிறந்த புனித பங்கிராஸ், 304ம் ஆண்டு மறைசாட்சியாக உயிரிழந்ததாக வரலாறு கூறுகிறது.
இளைஞர் பங்கிராஸ் இன்று எந்த அளவுக்கு சிறப்புப் பெற்றவரெனில், இலண்டனில் புனித பங்கிராஸ் பெயரில் தொடர்வண்டி நிலையம் ஒன்று இன்றும் காட்சியளிக்கிறது. புனித பெரிய கிரகோரியார் மறைபரப்புப் பணிக்கென இங்கிலாந்து சென்றபோது, இப்புனிதர் பெயரால் ஆசீர்வாதப்பர் சபைத் துறவிகளுக்கு துறவு மடம் கட்டினார். இச்சபையைச் சேர்ந்த துறவியும் ஆயருமான புனித அகஸ்டின் பதவிக்கு வந்தபோது, அவர் அந்த நாட்டில் எழுப்பிய முதல் ஆலயத்திற்கு புனித பங்கிராஸ் பெயரைச் சூட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.