2014-06-19 15:50:09

மதிப்பு தரும் தொழில் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே இலக்கு - ஐ.நா. பொதுச் செயலர்


ஜூன்,19,2014. வேலைவாய்ப்பும், தகுந்த வேலைகளும் இளையோருக்குக் கிடைப்பதே, வருங்கால முன்னேற்றத்தின் உயிர் நாடியாக அமையும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.
ஜெனீவாவில் செயலாற்றும் பன்னாட்டு தொழில் நிறுவனமான ILOவில் இப்புதனன்று உரையாற்றிய பான் கி மூன் அவர்கள், தொழில்களை உருவாக்க அனைத்து நாடுகளும் சிரமப்பட்டு வரும் இவ்வேளையில், இளையோரைக் கருத்தில் கொண்டு தொழில் உலகம் இயங்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
வேலையில்லாத் திண்டாட்டத்தில் மிக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இளையோரே என்று கூறிய பான் கி மூன் அவர்கள், இன்றையக் கல்வி முறையும் இளையோரைத் தொழில் உலகிற்குத் தகுந்த வகையில் தயார் செய்வதில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இன்றைய உலகில் பாதிக்கு மேற்பட்டோர் 25 வயதுக்குக் குறைந்தவர்கள் என்றும், இவர்களில் பெரும்பான்மையான இளையோர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர் என்றும் குறிப்பிட்ட ஐ.நா. பொதுச் செயலர், வருங்கால உலகிற்கு இளையோர் ஈடு இணையற்ற செல்வம் என்பதையும் எடுத்துரைத்தார்.
மதிப்பு தரும் தொழில் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு நாம் அனைவருமே உழைக்க வேண்டும் என்று பான் கி மூன் அவர்கள், ILOவில் வழங்கிய உரையில் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.