2014-06-19 15:44:49

மதக் கலவரங்களால் வன்முறையாளர்களும், ஆயுத வர்த்தகர்களும் பயனடைகின்றனர் - கர்தினால் Vinko Puljić


ஜூன்,19,2014. மதக் கலவரங்கள் நிகழும்போது, அரசியல்வாதிகளும், அடிப்படைவாத வன்முறையாளர்களும், ஆயுத வர்த்தகர்களும் பயனடைகின்றனர் என்று Bosnia மற்றும் Herzegovina நாட்டின், Sarajevo உயர் மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Vinko Puljić அவர்கள் கூறினார்.
ஜூன் 16, மற்றும் 17, இத்திங்கள், செவ்வாய் ஆகிய இருநாட்கள், Sarajevo நகரில், கத்தோலிக்கர்களும், இஸ்லாமியரும் இணைந்து நிகழ்த்திய ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் Puljić அவர்கள், மதம் என்ற தவறான வார்த்தையைப் பயன்படுத்தி, கலவரங்களைத் தூண்டுபவர்கள், சுயநலம் மிக்கவர்கள் என்பதை, தன் சொந்த அனுபவத்தில் உணர்ந்ததாகக் கூறினார்.
Bosnia-Herzegovina பகுதிகளுக்கு இடையே 1992ம் ஆண்டு நடைபெற்ற போரைக் குறித்து தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட கர்தினால் Puljić அவர்கள், அந்தப் போருக்கு மத வெறியைக் காரணம் காட்டியது தவறு என்பதை வலியுறுத்திக் கூறினார்.
நைஜீரியா நாட்டில், Boko Haram வன்முறைக் குழு, மதத்தின் பெயரால் வெறுப்பை வளர்க்கும் உக்திகளைக் கையாள்வது குறித்தும், எகிப்து, ஈராக் ஆகிய நாடுகளில் வன்முறையைக் கையாளும் இஸ்லாமியக் குழுக்களின் உக்திகள் குறித்தும் இக்கருத்தரங்கில் பேசப்பட்டது என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
முதல் உலகப் போர் ஆரம்பமான நகராகவும், Bosnia-Herzegovina கலவரங்களின் கொடுமைகளைத் தாங்கிய நகராகவும் விளங்கும் Sarajevo வில், "வன்முறை என்ற சோதனை: போருக்கும், ஒப்புரவுக்கும் இடையே மதங்கள்" என்ற தலைப்பில் இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கை Oasis என்ற பன்னாட்டு அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.