2014-06-19 15:48:04

திருத்தந்தை பிரான்சிஸ் வருகையால், பிலிப்பின்ஸ் நாட்டில் துயர் துடைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது


ஜூன்,19,2014. பிலிப்பின்ஸ் நாட்டைத் தாக்கிய Haiyan சூறாவளியால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பார்வையிட உள்ளார் என்ற செய்தி, அப்பகுதியில் துயர் துடைப்புப் பணிகளை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது என்று பிலிப்பின்ஸ் அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
2015ம் ஆண்டு சனவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பின்ஸ் நாட்டுக்கு வருகை தரும்போது, சூறாவளியால் தாக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும், முற்றிலும் பழைய நிலைக்குத் திரும்புமா என்பது சந்தேகம்தான் என்று கூறிய அரசு அதிகாரி Panfilo Lacson அவர்கள், இருப்பினும், பெருமளவு சீரமைப்புப் பணிகள் முடிவு பெற்றிருக்கும் என்று உறுதியளித்தார்.
Haiyan சூறாவளியால் பாதிக்கப்பட்ட 171 உள்ளூர் ஆட்சி அமைப்புக்களில் இதுவரை 25 விழுக்காடு முன்னேற்றமே காணப்படுகிறது என்று ஆசியச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
திருத்தந்தையின் வருகைக்கு முன்னர், அப்பகுதிகளில் ஓரளவு இயல்பு நிலை திரும்பியிருக்கும் அளவு பிலிப்பின்ஸ் அரசு தற்போது தன் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது என்றும், சீரமைப்புப் பணிகளுக்கு அதிக அளவு நிதி உதவிகளும் வந்து சேருகின்றன என்றும் அரசு அதிகாரி Lacson அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.