2014-06-18 16:15:33

போதைப் பொருள் ஒழிப்பு நாளையொட்டி அர்ஜென்டீனா நாட்டு ஆயர்களின் கருத்துப் பரப்பு முயற்சி


ஜூன்,18,2014. "உங்கள் சுய உணர்வுக்குத் திரும்புங்கள்; உங்களையும், அடுத்தவரையும் கேளுங்கள்" என்ற விருதுவாக்குடன் போதைப் பொருள்களுக்கு எதிரான ஒரு கருத்துப் பரப்பு முயற்சியை, அர்ஜென்டீனா நாட்டு ஆயர்கள் மேற்கொண்டுள்ளனர்.
ஜூன் 26, அடுத்த வியாழனன்று உலகெங்கும் போதைப் பொருள் ஒழிப்பு நாள் கடைபிடிக்கபடுவதையொட்டி, இச்செவ்வாய் முதல், பத்துநாள் கருத்துப் பரப்பு முயற்சியை மேற்கொண்டுள்ள ஆயர்கள், அனைத்து சமூக வலைத்தளங்கள் வழியாகவும் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.
தாங்களோ, தங்களுக்கு நெருங்கியவர்களோ போதைப்பொருள் தாக்கத்தில் இருப்பதாக உணர்ந்தால், அவர்கள் யாரை, எவ்விதம் நெருங்கி உதவிகள் பெறமுடியும் என்ற விழிப்புணர்வை ஆயர்கள் உருவாக்கி வருகின்றனர் என்று ஆயர் பேரவையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
கல்வி நிலையங்கள், மற்றும் இளையோர் அதிகம் சேர்ந்து வரும் இடங்கள் ஆகிய தளங்களில் இந்த விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஆயர் பேரவையின் செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.