2014-06-18 16:18:03

நர்ஸ் என்பதால் மகனின் உடல் உறுப்பு தானத்துக்கு அம்மா உடனடி சம்மதம் : உறுப்புகளை தானம் செய்த இளைஞரின் உடல் தகனம்


ஜூன்,18,2014. மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகளை தானம் செய்த இளைஞர் லோகநாதனின் உடல், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பழையனூரில் செவ்வாய் மாலை தகனம் செய்யப்பட்டது. இளைஞரின் தாய் ஒரு நர்ஸ் என்பதால், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு உடனடியாக சம்மதித்தார் என தெரியவந்துள்ளது.
பழையனூரைச் சேர்ந்த ராஜலட்சுமியின் ஒரே மகன் லோகநாதன் (27). எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பட்டயப் படிப்பு படித்துவிட்டு, சென்னையில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். கடந்த 11-ம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலை விபத்தில் சிக்கிய லோகநாதன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர், திங்கள்கிழமை (ஜூன் 16) காலையில் மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய தாய் ராஜலட்சுமி முன்வந்தார். எனவே அன்று மாலையே அறுவைச் சிகிச்சை செய்து லோகநாதனின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், கண்கள் மற்றும் முதுகில் இருந்து தோல் ஆகியவற்றை டாக்டர்கள் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் இதய கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மும்பையை சேர்ந்த இளம் பெண்ணுக்கு லோகநாதனின் இதயம் பொருத்தப்பட்டது.
காவல் துறையினரின் உதவியுடன் இந்த இதயம் இரு மருத்துவமனைகளுக்கு இடையே வெகு வரைவில் எடுத்துச் செல்லப்பட்ட நிகழ்வை ஊடகங்கள் புகழ்ந்துள்ளன.
லோகநாதனின் தாய் ராஜலட்சுமி அவர்கள் ஒரு நர்ஸ் என்பதால், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உடனடியாக சம்மதம் தெரிவித்துவிட்டார். “மற்றவர்களுக்கு உதவி செய்வது எனக்கும், என் மகனுக்கும் மிகவும் பிடிக்கும். என் மகனால், பலர் உயிர் பிழைப்பார்கள் என்றால் அது பெருமைப்பட வேண்டிய விடயம்” என ராஜலட்சுமி கூறினார்.

ஆதாரம் : தி இந்து








All the contents on this site are copyrighted ©.