2014-06-18 16:07:16

திருத்தந்தையின் புதன் பொது மறையுரை - திருஅவை ஓர் அன்னை


ஜூன்,18,2014. அன்பர்களே, உரோம் நகரில் கடந்த சில நாள்களாக மழை பெய்ந்து கொண்டிருக்கிறது. இப்புதன் காலையும் இலேசாக இடியுடன் பெய்யத் தொடங்கிய மழை பின்னர் நின்றுவிட்டது. மழை மற்றும் வெயிலின் காரணமாக, இப்புதன் காலையில் வத்திக்கான் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த நோயாளிகளை முதலில் சென்று ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் மழையில் நனைந்துவிடாமல் இருப்பதற்காக எனச் செபியுங்கள், எனக்காவும் செபியுங்கள் என்று நோயாளிகளிடம் கேட்டு அவர்களை ஆசீர்வதித்தார் திருத்தந்தை. பின்னர் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்துக்குத் திறந்த காரில் மக்கள் மத்தியில் வலம் வந்தார். வெயில் அடித்ததால் சிலர் குடைகளைப் பிடித்திருந்தனர். ஒரு பயணி தனக்குக் கொடுத்த குடையை, வேண்டாம், நீங்களே பிடித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி வளாக மேடை சென்று இன்றைய மறையுரையைத் தொடங்கினார் திருத்தந்தை. அங்குக் கூடியிருந்த மக்களிடம், இப்பொழுது மழை பெய்யுமா, பெய்யாதா என்ற நிலையில் இங்கிருக்கும் நீங்கள் உண்மையிலேயே துணிச்சலானவர்கள். மழைக்கு முன்னதாகவே இந்த நமது சந்திப்பை முடிப்போம் என நம்புவோம். ஆண்டவரே எம்மீது இரக்கம் வையும் என்று செபித்து, திருஅவை என்ற தலைப்பில் தனது மறைபோதகத்தை ஆரம்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
RealAudioMP3 திருஅவை வெறும் ஒரு நிறுவனம் அல்ல, ஆனால் அது ஓர் அன்னை, ஒரு குடும்பம். முழு மனித குலத்தையும் அரவணைப்பதற்காக உள்ள ஒரு பேருண்மை. இயேசு கிறிஸ்துவால் நிறுவப்பட்ட திருஅவை, பழைய ஏற்பாட்டில் தனது மூலத்தைக் காண்கிறது. பழைய ஏற்பாட்டில், கடவுள் ஆபிரகாமை அழைத்து, அவர் தனது குடும்பத்தினரோடு ஒரு புதிய இடத்தில் வாழ அவரை அழைத்தார். அதோடு, இப்பூமியின் எல்லா நாடுகளுக்கும் தமது ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்படியாக பெருமளவான மக்களுக்குத் தந்தையாக அவரை ஏற்படுத்துவதாகவும் கடவுள் வாக்குறுதியளித்தார். இதில் கடவுள்தாமே முதல் அடி எடுத்து வைக்கிறார். அவர் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து அவரது குடும்பத்தினர் எல்லாரும் விசுவாசத்தில் தம்மைப் பின்செல்லச் செய்தார். கடவுள் காட்டும் பாதை எப்போதும் தெளிவாக இருப்பதில்லை. பாவம் செய்வதற்கான தொடர் சோதனை மற்றும் பற்றுறுதியின்மை உட்பட, தடைகள் இல்லாத வழியாகவும் அந்தப் பாதை இருப்பதில்லை. எனவே, இறைமக்களின் அதாவது திருஅவையின் வரலாறு கடவுளின் முழுமையான பற்றுறுதி, கருணை, அன்பு ஆகியவற்றில் ஒன்றாக உள்ளது. கடவுளின் தவறாத உதவியினால் மட்டுமே நாம் நம் பாவங்களை விலக்கி, கிறிஸ்துவில் அவர் காட்டும் பாதையைப் பின்தொடர முடியும். வரலாறு முழுவதும் திருஅவை தனது விசுவாசப் பயணத்தில் உறுதியாய் நிற்கவும், நம் வான்வீட்டிற்குத் திருஅவையை வழிநடத்திச் செல்லவும், தம் பிள்ளைகள் அனைவருக்கும் ஓர் ஆசீர்வாதமாகவும், கடவுளின் அன்புத் திட்டத்தின் ஓர் அடையாளமாகவும் விளங்கவும் திருஅவைக்காக நம் இறைவனிடம் செபிப்போம்
இவ்வாறு இப்புதன் பொது மறையுரையை நிறைவு செய்த திருத்தந்தை, ஜூன் 20, வருகிற வெள்ளியன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக புலம்பெயர்ந்தோர் தினம் குறித்து குறிப்பிட்டு, பல நாடுகளில் துன்புறும் இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர் எதிர்நோக்கும் வறிய நிலைகள் பற்றிப் பேசினார். இம்மக்கள் நன்கு வரவேற்கப்படவும், மாண்புடன் நடத்தப்படவும், இவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கை வழங்கப்படுமாறும் கேட்டுக்கொண்ட RealAudioMP3 ார். அன்னைமரியிடம் இம்மக்களுக்காகச் செபித்தார். பின்னர் இந்த புதன் மறைபோதகத்தில் கலந்து கொண்ட இந்தியா, குவைத் உட்பட பல நாடுகளின் பயணிகளுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்த RealAudioMP3 ார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.