2014-06-18 16:12:12

திருத்தந்தை 12ம் பயஸ், இத்தாலி நாட்டின் பாதுகாவலர்களை அறிவித்த 75ம் ஆண்டு நிறைவு


ஜூன்,18,2014. இத்தாலி நாடு கடினமான வரலாற்றை எதிர்கொண்ட காலங்களில் வாழ்ந்த அசிசி நகர், புனித பிரான்சிஸ் அவர்களும், சியென்னா நகர் புனித கத்தரீன் அவர்களும் நம் அனைவருக்கும் நற்செய்தியின் புதிய வழிகளைச் சொல்லித் தந்தனர் என்று திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் கூறினார்.
திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் ஆண்டில், அசிசி நகர், புனித பிரான்சிஸ் அவர்களையும், சியென்னா நகர் புனித கத்தரீன் அவர்களையும் இத்தாலி நாட்டின் பாதுகாவலர்கள் என்று அறிவித்து, சுற்றுமடல் ஒன்றை, 1939ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி வெளியிட்டார்.
அந்த சுற்றுமடல் வெளியிடப்பட்ட 75ம் ஆண்டு நிறைவை, இவ்வாண்டு ஜூன் 18, இப்புதனன்று திருஅவை சிறப்பிக்கும் வேளையில், இந்தச் சுற்றுமடலை, L'Osservatore Romano மீண்டும் ஒருமுறை வெளியிட்டுள்ளது.
திருஅவையைக் காப்பதிலும், மக்களுக்கு, குறிப்பாக, வறியோருக்கு முன்னுரிமை வழங்கிப் பணியாற்றுவதிலும் இணையற்ற எடுத்துக்காட்டுகளாக விளங்கிய இவ்விரு புனிதர்களின் நினைவு காலம் காலமாய் நம் மத்தியில் இருக்கவேண்டும் என்று திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.