2014-06-18 16:11:38

திருத்தந்தை, ஆகஸ்ட் மாதம் தென்கொரியாவுக்கு மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணம் குறித்த விவரங்கள்


ஜூன்,18,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென்கொரியாவில் நடைபெறும் அகில உலக ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் விவரங்கள், ஜூன் 18, இப்புதனன்று வெளியிடப்பட்டன.
வருகிற ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி முதல் 18ம் தேதி முடிய தென்கொரியாவுக்கு, திருத்தந்தை மேற்கொள்ளும் இந்த மேய்ப்புப்பணி பயணம், ஆகஸ்ட் 13, புதன் மாலை 4 மணிக்கு, உரோம் நகர், Fiumicino பன்னாட்டு விமான நிலையத்தில் துவங்குகிறது.
தென்கொரியாவின் தலைநகர், Seoul விமானப்படை தளத்தை, ஆகஸ்ட் 14, வியாழன் காலை 10.30 மணியளவில் சென்றடையும் திருத்தந்தை, அன்று மாலை 4.30 மணியளவில் தென்கொரிய அரசுத்தலைவரைச் சந்தித்தபின், மாலை 5.30 மணிக்கு கொரிய ஆயர்பேரவைத் தலைமையகத்தில் அனைத்து ஆயர்களையும் சந்திக்கிறார்.
ஆகஸ்ட் 15, மரியன்னையின் விண்ணேற்பு திருநாளன்று, காலை 10.30 மணிக்கு, Daejon உலகக் கோப்பை திறந்த வெளியரங்கில் திருப்பலியாற்றும் திருத்தந்தை, அன்று மதியமும், மாலையும் இளையோர் குழுக்களைச் சந்திக்கிறார்.
ஆகஸ்ட் 16, சனிக்கிழமை காலை 9 மணியளவில், தென்கொரிய மறைசாட்சிகளின் திருத்தலமான Seo So Mun செல்லும் திருத்தந்தை, 10 மணிக்கு, Paul Yun Ji-Chung அவர்களையும், அவரது 123 துணையாளர்களையும் முத்திப்பேறு பெற்றவர்களாக உயர்த்தும் திருப்பலியை நிறைவேற்றுகிறார்.
அன்று மாலையில் "நம்பிக்கையின் இல்லம்" என்ற இல்லத்தில் தங்கள் வாழ்வைச் சீரமைக்கும் இளையோரைச் சந்தித்து உரையாற்றும் திருத்தந்தை, பின்னர், பொதுநிலையினர் தலைவர்களையும், இருபால் துறவிகளையும் சந்திக்கிறார்.
ஆகஸ்ட் 17ம் தேதி, ஞாயிறன்று, ஆசிய ஆயர்களை, காலை 11 மணிக்குச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று மாலை 4 மணிக்கு அகில உலக ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளின் சிகரமாக அமையும் திருப்பலியை நிறைவேற்றுகிறார்.
ஆகஸ்ட் 18, திங்களன்று, காலை தென்கொரியாவில் உள்ள அனைத்து மதத் தலைவர்களையும் சந்திக்கும் திருத்தந்தை, அன்று மதியம் 1 மணிக்கு Seoul விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு, மாலை 5.45 மணிக்கு உரோம் நகர் வந்து சேருகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.