2014-06-18 16:16:51

இஸ்லாமிய உடன்பிறந்தோருக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ள கொடுமையை வன்மையாகக் கண்டிக்கிறோம் - இலங்கை கிறிஸ்தவத் தலைவர்கள்


ஜூன்,18,2014. இலங்கையில், இஸ்லாமிய உடன்பிறந்தோருக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ள கொடுமையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று இலங்கையில் உள்ள கிறிஸ்தவத் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
இலங்கையில் உள்ள Bodu Bala Sena எனப்படும் புத்தமத அடிப்படைவாதக் குழுவினரால், ஜூன் 15, இஞ்ஞாயிறு முதல் துவக்கப்பட்ட தாக்குதல்களில் இதுவரை நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், ஒரு வாரக் குழந்தை ஒன்று உட்பட, 91 பேர் காயமுற்றுள்ளனர் என்றும் ஆசியச் செய்தி கூறுகிறது.
அரசுக்கு எதிராக எழும் எந்த ஒரு சிறு எதிர்ப்பையும் உடனடியாக அடக்கிவிடும் அரசு இயந்திரங்கள், இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டோரை கட்டுப்படுத்தவோ, இஸ்லாமியரைக் காப்பாற்றவோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாதது வேதனையைத் தருகிறது என்று அருள் பணியாளர் அசோக் ஸ்டீபன் அவர்கள் ஆசியச் செய்தியிடம் கூறினார்.
இலங்கையில் 69 விழுக்காடு மக்கள் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள். அதற்கு அடுத்தபடியாக, 7.6 விழுக்காட்டினர் இஸ்லாமியர், மற்றும் 6.2 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.