2014-06-17 17:10:18

திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலிய நீதிபதிகளிடம் : நுண்மதி உள்ளவர்களாய் பாரபட்சமின்றி செயல்படுங்கள்


ஜூன்,17,2014. ஒரு நீதிபதியின் சிறப்புப் பண்பாக விளங்க வேண்டிய நுண்மதி என்ற பண்பு, அவரின் நீதித் தீர்ப்புக்கு அடித்தளமாக அமைய வேண்டுமெனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
CSM என்ற இத்தாலிய நீதிபதிகள் அமைப்பின் உயர்மட்ட அவையின் ஏறக்குறைய 280 பிரதிநிதிகளை இச்செவ்வாய் காலை வத்திக்கானில் சந்தித்து உரை நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
நீதித் தீர்ப்பில் தெளிவு இருக்க வேண்டும், அது சொந்தக் கருத்துக்களிலிருந்து விலகியதாகவும், அதேநேரம் மனிதப் பக்குவத்தை வெளிப்படுத்துவதாகவும், உண்மையான நிலைகளோடு ஒத்துப்போவதாகவும் அமைய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
நீதிபதியாய் இருப்பவருக்கு அறிவுத்திறன், உளவியல் மற்றும் நன்னெறிப் பண்புகள் அவசியம் என்றுரைத்த திருத்தந்தை, நுண்மதி உள்ளவர்களாய், பாரபட்சமின்றி செயல்பட்டு, நன்னெறி வாழ்வுக்கு எடுத்துக்காட்டாயத் திகழுங்கள் என்றும் இத்தாலிய நீதிபதிகளைக் கேட்டுக்கொண்டார்.
இறுதியில், CSM நீதிபதிகள் அமைப்பைச் சந்திப்பதற்கான தேதியை தள்ளிப் போட்டதற்கு வருத்தமும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.