2014-06-17 17:10:42

திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவை தாய், அது அரசு-சாரா அமைப்பு அல்ல


ஜூன்,17,2014. திருஅவை தாயாக நோக்கப்பட வேண்டும், ஆனால் அது நிறைய மேய்ப்புப்பணித் திட்டங்களைக் கொண்டிருக்கும் நன்கு திட்டமிடப்பட்ட அரசு-சாரா அமைப்பாக நோக்கப்படக் கூடாது என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
தனது உரோம் மறைமாவட்டத்தின் மாநாட்டை இத்திங்கள் மாலையில் தொடங்கி வைத்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதிகமதிகமான மக்கள் கைவிடப்பட்டவர்கள் போன்று வாழ்வு நடத்தும் ஒரு சமுதாயத்தில் திருஅவை ஒரு தாயின் பங்கை செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார்.
கடந்த ஆண்டில் உரோம் மறைமாவட்டத்தில் பல பங்குத்தளங்களைப் பார்வையிட்டு பெருமளவான மக்களைத் தான் சந்தித்ததாகவும், அவர்கள் தங்களின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புக்கள் ஆகியவற்றுடன், தங்களின் வேதனைகளையும் பிரச்சனைகளையும் தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் கூறினார் திருத்தந்தை.
பலர் தங்கள் வாழ்வின் பொருளையும் விழுமியங்களையும் இழந்து, வாழ்வின் இன்னல்களோடு குழம்பிப்போய் இருப்பதாக உணர்கின்றனர் எனவும் குறிப்பிட்ட திருத்தந்தை, பெற்றோரின் ஒரு நாளைய கடினமான பணியை நிநைத்துப் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பில்லாமல் கைவிடப்பட்ட நிலைக்கு இளையோரை உட்படுத்தும் கலாச்சாரம் குறித்து கவலை தெரிவித்தவேளையில், திருஅவை ஓர் அன்னையாக இருந்து செயல்பட வேண்டியது அவசியம் என, உரோம் மறைமாவட்ட மாநாட்டில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.