2014-06-17 17:10:29

திருத்தந்தை பிரான்சிஸ் : ஏழைகளுக்கு வழங்கப்படும் ஊதியம் கடவுளுக்கு எரிச்சலூட்டுகிறது


ஜூன்,17,2014. ஊழல்வாதிகள் கடவுளை எரிச்சலடையச் செய்கின்றனர் மற்றும் கடவுளின் மக்களைப் புண்படுத்துகின்றனர் என, வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்தில் இச்செவ்வாய் காலை நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஸ்ரயேல் அரசன் ஆகாபு, நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைக் கவர்ந்து அவரைக் கொலை செய்ததால் எலியா இறைமனிதர் வழியாக கடவுள் அரசன் ஆகாபுக்கு விடுத்த தண்டனைய பற்றிச் சொல்லும் இந்நாளைய திருப்பலி முதல் வாசகத்தை மையமாக வைத்து வழங்கிய மறையுரையில் திருத்தந்தை, அரசியலிலும், வணிகத்திலும் திருஅவையிலும் இடம்பெறும் ஊழல்களைக் கண்டித்துப் பேசினார்.
தினத்தாள்களில் நாம் வாசிக்கும் இலஞ்ச ஊழல்கள், இன்னும், சில அருள்பணியாளர்கள் செய்யும் பல காரியங்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, ஊழல்வாதிகள் தங்களது செயல்களிலிருந்து வெளிவருவதற்கு, கடவுளிடம் மன்னிப்பைப் பெறக் கெஞ்சுவதே ஒரே வழி, இல்லாவிடில் அவர்கள் கடவுளின் சாபத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார்.
ஒருவர் ஊழல் பாதையில் நுழையும்போது தனது மனிதத்தை இழந்து, தன்னையே விற்கிறார் என்றும், வாங்கி விற்பனை செய்யும் சந்தைப் பொருள் என ஊழலுக்கு அர்த்தம் சொல்லலாம் என்றும், ஊழல்வாதிகள் கடவுளை எரிச்சல்படுத்தி, சமுதாயத்துக்குத் துர்மாதிரிகையாக உள்ளனர், ஏனெனில் இவர்கள் நலிந்தவர்களை அடிமைப்படுத்தி சுரண்டி, ஏன் கொலையும் செய்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
இத்திங்கள் மறையுரையில் கூறியதுபோல, ஊழல் அரசியல்வாதிகள், ஊழல் தொழிலதிபர்கள், ஊழல் திருஅவை நபர்கள் ஆகிய மூவருமே அப்பாவிகளையும் ஏழைகளையும் புண்படுத்துகின்றனர், தங்கள் ஊழல்களில் ஒரு பகுதியை ஏழைகள் செலுத்துமாறு செய்கின்றனர், இவர்கள்மீது பேரிடரை வரச் செய்வேன் என ஆண்டவர் தெளிவாகச் சொல்கிறார் எனவும் கூறினார் திருத்தந்தை.
ஊழலைவிட்டு வெளியே வருவதற்கு கடும் தபம் செய்ய வேண்டும், இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் இச்செவ்வாய் காலைத் திருப்பலியில் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.