2014-06-17 17:11:04

இலங்கையில் இடம்பெற்றுவரும் வகுப்புவாத வன்முறைகள் நிறுத்தப்படுமாறு நவி பிள்ளை வலியுறுத்தல்


ஜூன்,17,2014. இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள அதேவேளையில், வெறுப்புணர்வைத் தூண்டும் பிரச்சாரங்கள் நிறுத்தப்படுமாறு வலியுறுத்தியுள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் நிறுவனத் தலைவர் நவி பிள்ளை.
வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களை அடக்கி ஒடுக்கவும், வன்முறையை நிறுத்தவும் இலங்கை அரசு அனைத்து வழிகளிலும் முயற்சிக்குமாறு கேட்டுள்ளார் நவி பிள்ளை.
மேலும், இலங்கையில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட சிறுபான்மை சமயத்தவர்க்கு எதிராக தாக்குதல்கள் இடம்பெறுவது குறித்து, இந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் அவை தனது அதிர்ச்சியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் களுத்துறை மாவட்டம், அளுத்கமவில் தீவிரவாத புத்தமதக் குழுக்களுடன் நடந்த மோதலில் 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் கூறியுள்ளனர்.
கடந்த இரு வருடங்களாக சிங்கள தீவிரவாத புத்தமதக் குழுவினர் முஸ்லிம் எதிர்ப்பு போராட்டங்களை நடத்திவருகின்றனர். வழக்கமாக புத்த பிக்குமார் இவற்றுக்குத் தலைமை தாங்குவது வழக்கம் என்றும், இவை அண்மை ஆண்டுகளில் மத வன்முறைகளாக உருவெடுத்துள்ளன என்றும் ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.