2014-06-17 17:11:10

ஆட்சியராகப் போகும் சென்னை பார்வையற்ற மாணவி


ஜூன்,17,2014. தனது தளராத முயற்சியால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று கலெக்டர் ஆகப் போகிறார் சென்னையைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி பெனோ ஷெபைன். இது அவரது தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் கிடைத்த பரிசு என ஊடகங்கள் பாராட்டியுள்ளன.
கடந்த வியாழக்கிழமை வெளியான ஐ ஏஎஸ் தேர்வு முடிவில் தமிழகத்தைச் சேர்ந்த வங்கி பெண் அதிகாரி பெனோ ஷெபைன்(24) வெற்றி பெற்று அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளார். பெனோ, பிறவியிலேயே பார்வையில்லாதவர் என்பதுதான் அந்த வியப்புக்கு காரணம்.
சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாரான அனுபவங்களையும் சந்தித்த சவால்களையும் தி இந்து தினத்தாள் நிருபர் ஒருவருடன் பகிர்ந்து கொண்ட பெனோ, தனது வெற்றியில், தனது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், பயிற்சி மையங்களைச் சேர்ந்தவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பங்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு... ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும்’என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல; சத்தியங்கள். அதைச் செயல்படுத்த உழைக்க வேண்டும். சாதிக்க வேண்டும் என்ற கனவு காண வேண்டும். அந்தக் கனவு நனவாக வேண்டுமானால், தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சி அவசியம். அதுதான் தடைகளைத் தகர்த்தெறியும் ஆயுதம். அனைத்து மாணவர்களுக்கும் பெனோ கூறும் அறிவுரை இதுதான் என்று அந்த நிருபர் எழுதியுள்ளார்.

ஆதாரம் : தி இந்து







All the contents on this site are copyrighted ©.