2014-06-16 15:53:40

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளை மிகைப்படுத்தாமல், உண்மையை வெளிச்சத்திற்குக் கொணர வேண்டும் - ஆயர் Salvadore Lobo


ஜூன்,16,2014. ஊடகங்களின் உதவியுடன் நற்செய்தியைப் பறைசாற்றுவது இந்தியத் திருஅவையின் முக்கியமான பணியாக அமையும் என்று இந்திய ஆயர் பேரவையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்திய ஆயர் பேரவையில் சமூகத் தொடர்பு பணிக்குழுவின் தலைவராக அண்மையில் பொறுப்பேற்ற Baruipur மறைமாவட்ட ஆயர் Salvadore Lobo அவர்கள் Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
மிகத் துரிதமாக இயங்கும் ஊடக உலகில் வாழும் நாம், உண்மையான வழியாக, ஒளியாக விளங்கும் கிறிஸ்துவை ஊடகங்களின் உதவியுடன் அனைத்து மக்களிடமும் எடுத்துச் செல்வது முக்கியம் என்று ஆயர் Lobo அவர்கள் எடுத்துரைத்தார்.
கிறிஸ்தவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராக வன்முறைகள் பெருகிவரும் இவ்வேளையில், இந்த வன்முறை நிகழ்வுகளை மிகைப்படுத்தாமல், உண்மையை வெளிச்சத்திற்குக் கொணர்வது நமக்கு முன் உள்ள பெரிய சவால் என்று ஆயர் Lobo அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.
மதம், இனம் என்ற எவ்வகைப் பாகுபாடும் இன்றி, இந்தியத் திருஅவை அனைவருக்கும் பணியாற்றும் மேன்மையை இவ்வுலகிற்குப் பறைசாற்றுவதும் சமூகத் தொடர்பு பணிக்குழுவின் முக்கியப் பணி என்று ஆயர் Lobo அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.