2014-06-16 15:43:04

Canterbury பேராயரிடம் திருத்தந்தை - பல்வேறு பிளவுகள் மறைந்து அனைவரும் நற்செய்தியை பறைசாற்றும் சாட்சிகளாக வாழவேண்டும்


ஜூன்,16,2014. நாம் இன்று சந்திக்கும் இந்நிகழ்வு, கிறிஸ்தவ நம்பிக்கை கொண்ட அனைவரையும் ஒப்புரவாக்கி, ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியாக அமையட்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆங்கிலிக்கன் சபையின் தலைவர், Canterbury பேராயர் Justin Welby அவர்களிடம் கூறினார்.
ஜூன் 14 முதல் 16, இத்திங்கள் முடிய ஆங்கிலிக்கன் சபையின் தலைவரான பேராயர் Justin Welby அவர்கள், உரோம் நகரில் பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தின் ஓர் உச்ச கட்டமாக, அவர் இத்திங்கள் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரையில், கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோரிடையே உள்ள பல்வேறு பிளவுகள் மறைந்து அனைவரும் நற்செய்தியை பறைசாற்றும் சாட்சிகளாக வாழவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
தங்களில் யார் பெரியவர் என்பதை குறித்து விவாதம் மேற்கொண்டிருந்த சீடர்களிடம் இயேசு, 'வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?' (மாற்கு 9:33) கேட்டபோது, அவர்களால் பதில் சொல்லமுடியாமல் வெட்கிநின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, கிறிஸ்தவர்களிடையே நிலவும் பிரிவுகள் உலகில் பெரும் எதிர்சாட்சியாக இருப்பதைக் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
அண்மையக் காலங்களில் ஆங்கிலிக்கன் சபைக்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள உறவு முயற்சிகள் குறித்தும் தன் உரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதிர்காலத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு இன்னும் பலமான பாதையில் செல்லவேண்டும் என்ற தன் விருப்பத்தையும் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.