2014-06-14 16:05:07

வத்திக்கான் உயர் அதிகாரி : உலகின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஒரே வழி ஒருமைப்பாட்டுணர்வு


ஜூன்,14,2014. உலகில் நிலவும் ஏழ்மை, சுரண்டல் மற்றும் மோதல்களை ஒழிப்பதற்கு சிறந்த வழி, ஒருமைப்பாட்டுணர்வுக் கோட்பாட்டைப் பயன்படுத்துவதே என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா. கூட்டம் ஒன்றில் கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு கூறினார்.
நாடுகளுக்குள்ளும், நாடுகளுக்கு இடையேயும் இடம்பெறும் மோதல்கள், வெப்பநிலை மாற்றம் ஆகியவற்றால் மனிதர் அனுபவிக்கும் துன்பங்கள் தவிர, மனிதரின் சுய பேராசையால், அடிமைத்தனத்தின் பல்வேறு வடிவங்களில் இலட்சக்கணக்கான சிறாரும், பெண்களும், ஆண்களும் மனிதமற்ற சூழல்களில் துன்புறுவதையும் பேராயர் சுட்டிக்காட்டினார்.
குறைவான ஊதியம் பெறும் மக்களையும், ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டோரின் துன்ப நிலைகளையும் நாம் மறக்கக் கூடாது எனக் கூறியுள்ள பேராயர் தொமாசி, இத்தகைய அநீதியான மற்றும் கொடுமையான நிலைகளை, ஒருமைப்பாட்டுணர்வின் மூலமே தீர்க்க இயலும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.