2014-06-14 16:05:21

உலக இரத்த தானக் கொடையாளர் தினம்


ஜூன்,14,2014. “தாய்மார்களைக் காப்பாற்ற பாதுகாப்பான இரத்தம்”என்ற கருத்தை முன்னிறுத்தி, ஜூன் 14 இச்சனிக்கிழமையன்று உலக இரத்த தானக் கொடையாளர் தினம் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.
இத்தினத்தையொட்டி செய்தி வெளியிட்டுள்ள, உலக நலவாழ்வு நிறுவனத்தின், இரத்த தான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் Neelam Dhingra அவர்கள், மகப்பேறு மற்றும் குழந்தை பிறப்பின்போது ஏற்படும் பிரச்சனைகளால் உலகில் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 800 பெண்கள் வீதம் இறக்கின்றனர் என்று கூறினார்.
மகப்பேறு மற்றும் குழந்தை பிறப்பின்போது வெளியேறும் பெருமளவான இரத்தமே தாய்மார்களின் இறப்புக்குக் காரணம் என்றும், இப்பெண்களின் உயிர்களைக் காப்பாற்ற இரத்த தானம் அவசியம் எனவும் கூறினார் Dhingra.
உலக மக்கள் தொகையில் 18 விழுக்காட்டினர் ஆண்டுதோறும் இரத்த தானம் செய்கின்றனர். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் 18 முதல் 24 வயதுக்கு உள்பட்டவர்களில் 41 விழுக்காட்டினரும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் 20 விழுக்காட்டினரும் இரத்தம் வழங்குகின்றனர் எனவும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறுகிறது.
மேலும், உலகில் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 10 கோடியே 80 இலட்சம் இரத்த தானங்களும், இவற்றில் பெரும்பாலும் பாதி, குறைந்த வருவாய் உள்ள நாடுகளிலிருந்து செய்யப்படுகின்றன என உலக நலவாழ்வு நிறுவனம் கூறுகிறது.
இரத்த தானம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இத்தானம் அளிப்போரை கவுரவிக்கும் வகையிலும் உலக நலவாழ்வு நிறுவனம் கடந்த 2004ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி முதல் உலக இரத்த தானக் கொடையாளர் தினத்தை அறிவித்து, ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.