2014-06-13 15:50:00

போர்க்கால பாலியல் வன்கொடுமைகள் குறித்து வெஸ்ட்மின்ஸ்ட்டர் கர்தினால் கவலை


ஜூன்,13,2014. போர்களின்போது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து கவலை தெரிவித்த அதேவேளையில், இக்கொடுமைகள் நிறுத்தப்படுமாறு அழைப்புவிடுத்தார் வெஸ்ட்மின்ஸ்ட்டர் கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ்.
இலண்டனில் இவ்வெள்ளியன்று நிறைவடைந்த, போர்க்கால பாலியல் வன்கொடுமைகள் தடுப்பு குறித்த உலகளாவிய மாநாட்டில் உரையாற்றிய கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், ஒவ்வொரு மனிதச் செயலும் அறநெறிக் கோட்பாடுகளுக்கும், அதன் நியாயமான தீர்ப்புக்கும் உட்பட்டவை என்றும் கூறினார்.
பாலியல் நடவடிக்கைகள் உண்மையான சுதந்திரச் சூழல்களில் நடக்க வேண்டும் என வலியுறுத்தும், பாலியல் நடவடிக்கைகள் குறித்த திருஅவைப் போதனையின் அடிப்படைக் கூற்றைச் சுட்டிக்காட்டிப் பேசிய கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், பாலியல் நடவடிக்கைகளில் எந்தவித மனிதப் பண்பற்ற செயல்களுக்கும், கட்டாயப்படுத்துதலுக்கும் இடமேயில்லை என்று தெரிவித்தார்.
பிரிட்டன் வெளியுறவு செயலர் William Hague, ஐ.நா. சிறப்புத் தூதர் Angelina Jolie ஆகிய இருவரும் இணைந்து நடத்திய இந்த நான்கு நாள் மாநாட்டில், ஏறக்குறைய 140 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.