2014-06-13 15:49:46

ஈராக்கின் நிலைமை குறித்து கர்தினால் சாந்திரி மிகுந்த கவலை


ஜூன்,13,2014. ஈராக்கின் தற்போதைய நிலைமை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, கீழைவழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்திரி அவர்கள், ஈராக்கின் தற்போதைய நிலைமை குறித்து மிகுந்த கவலையுடன் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்நாட்டின் கல்தேய முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ அவர்கள், அனைத்து ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் விசுவாசிகளுடன் செபத்தில் இணைந்திருப்பதாகவும் கர்தினால் சாந்திரி அவர்களின் அறிக்கை கூறுகிறது.
ஈராக்கின் அனைத்து கத்தோலிக்க ஆலயங்களும், பள்ளிகளும் அந்நாட்டின் அனைத்து மதங்களைச் சார்ந்த அகதிகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளன எனவும், ஈராக் மக்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருக்கும் தந்தைக்குரிய பாசத்தையும், ஆன்மீக ஆறுதலையும் தெரிவிப்பதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.
இதற்கிடையே, ஈராக்கில் சுன்னிப் பிரிவு முஸ்லீம் புரட்சியாளர்கள் பல நகரங்களைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அந்நாட்டின் ஷியா பிரிவு முஸ்லீம் மூத்த குரு ஒருவர், ஷியா பிரிவினர் ஆயுதங்களைக் கையிலெடுக்குமாறு இவ்வெள்ளியன்று கேட்டுள்ளார் என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
ஈராக்கில் கடந்த சில நாள்களாக இடம்பெற்றுவரும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் எவ்வித ஈவு இரக்கமோ, விசாரணையோ இன்றி, கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.