2014-06-12 16:01:22

பணியிடங்களில் மனித உரிமைகள் மீறப்படுவது, எல்லா நாடுகளிலும் தொடர்கதையாக நீடிக்கிறது - பேராயர் சில்வானோ தொமாசி


ஜூன்,12,2014. சென்ற ஆண்டு, பங்களாதேஷ் நாட்டில் ஆடைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இடிந்து விழுந்ததில், 1100க்கும் அதிகமானோர் இறந்தது, வர்த்தக உலகில் காணப்படும் அநீதிகள் என்ற பனிப்பாறையின் மேல் நுனிப்பகுதிதான் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் செயலாற்றும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும், பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், மனித உரிமை அவையின் 26வது பொது அமர்வில், இப்புதனன்று வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.
"காப்பாற்றுதல், மதித்தல், குணமாக்குதல் - வர்த்தகத்தையும், மனித உரிமைகளையும் வழிநடத்தும் கோட்பாடுகள்" என்ற தலைப்பில், ஐ.நா.அவை உருவாக்கியுள்ள அறிக்கையை, திருப்பீடம் பெரிதும் வரவேற்கிறது என்று பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.
பணியிடங்களில் மனித உரிமைகள் மீறப்படுவது, எல்லா நாடுகளிலும் தொடர்கதையாக நீடிக்கிறது என்று குறிப்பிட்டப் பேராயர் தொமாசி அவர்கள், தொழிற்சாலைகளில் மனித உயிர்கள், பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்படும் அவலம் தீரவேண்டும் என்று விண்ணப்பித்தார்.
மனிதர்கள் என்ற அடிப்படை மதிப்பின்மீது காட்டப்படும் நன்னெறி விழுமியங்களே மனித உரிமைகளைக் காக்கமுடியும் என்று பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.