2014-06-12 15:57:21

திருத்தந்தையின் மறையுரை - அயலவருடன் ஒப்புரவு ஆகாமல், இறைவனை நாடிச் செல்வது இயலாது


ஜூன்,12,2014. உடன்பிறந்த உணர்வை, தன் சீடர்களுக்கு இயேசு கற்பித்தார் என்பதை தன் மையக்கருத்தாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் தன் மறையுரையை வழங்கினார்.
நம்மிடையே காணப்படும் சண்டை, சச்சரவுகளை மேற்கொள்ள மூன்று வழிகள் அவசியம் என்று கூறியத் திருத்தந்தை, நடைமுறைக் கண்ணோட்டம், நிலையான மனநிலை, உடன்பிறந்த உணர்வு என்பவை அவசியமான இவ்வழிகள் என்று விளக்கினார்.
அயலவர் அன்பு என்பதற்கு, பரிசேயர்களும், மத அறிஞர்களும் பல்வேறு அர்த்தங்களைத் தந்தபோது, இயேசு நடைமுறை வாழ்வுக்கு ஏற்ற எளிதான அர்த்தத்துடன் அயலவர் அன்பை விளக்கினார் என்று திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
அயலவர் அன்பு என்ற உன்னத இலக்கை அடைவது எளிதல்ல, இருப்பினும், அவ்வழியில் நடைபயில்வதற்கு, நடைமுறை வாழ்வுக்கேற்ற ஒப்பந்தங்களை மேற்கொள்வது பெரும் பயனளிக்கும் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
ஆயுதங்களைப் பயன்படுத்தி, அடுத்தவரை உடலால் கொல்வதும், வார்த்தைகளைப் பயன்படுத்தி, அவரை உள்ளத்தில் கொல்வதும், வெறுப்பு என்ற ஒரே ஊற்றிலிருந்து வெளிவரும் விளைவுகள் என்பதை, திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
அயலவருடன் ஒப்புரவு ஆகாமல், இறைவனை நாடிச் செல்வது இயலாது என்பதால், முதலில் நம் உடன்பிறந்தவருடன் பேச முயல்வோம், பின்னர், இறைவனுடன் நம்மால் பேசமுடியும் என்று தன் மறையுரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.