2014-06-12 16:04:32

சக்தி மிகுந்த கருவியாக விளங்கும் மதத்தை, நன்மைக்கும் தீமைக்கும் பயன்படுத்த முடியும் - நைஜீரிய ஆயர்கள்


ஜூன்,12,2014. சமுதாயத்தில் சக்தி மிகுந்த கருவியாக விளங்கும் மதத்தை, நன்மைக்கும் தீமைக்கும் பயன்படுத்த முடியும் என்று நைஜீரிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
"நைஜீரியாவில் மதமும், அரசும்" என்ற தலைப்பில், ஆயர்கள் விடுத்துள்ள ஓர் அறிக்கையில், நாட்டின் அரசு, மதத்திற்கு அளிக்கும் இடத்தைப்பொருத்து, மதம் ஆக்கப்பூர்வமாகவோ, அழிவுக்கோ பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்.
ஒரு கடவுள் என்ற கோட்பாடு கொண்ட நாடு, நைஜீரியா என்றும், நாட்டின் எந்த ஒரு மாநிலமும், எந்த ஒரு மதத்தையும் அதிகாரப் பூர்வமாகக் கடைபிடிக்கக் கூடாது என்றும் நைஜீரிய அரசின் சட்டம் 10ல் கூறப்பட்டுள்ளதை ஆயர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சட்டங்களின் வழியாக இந்த உறுதி வழங்கப்பட்டுள்ள போதிலும், வட நைஜீரியாவில், இஸ்லாம் மதத்தை அதிகாரப் பூர்வமான மதமாக நிலைநிறுத்தும் முயற்சிகள் வேதனையை உருவாக்குகின்றன என்றும், இந்தப் போக்கிற்கு அரசு இயந்திரங்கள் துணை போவது கவலையைத் தருகிறது என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.