2014-06-12 15:58:42

உலகக் கால்பந்து போட்டிகளின் துவக்க நாளையொட்டி, திருத்தந்தை அனுப்பியுள்ள ஒளி-ஒலிச் செய்தி


ஜூன்,12,2014. மொழி, கலாச்சாரம், நாடு என்ற எல்லைகளையெல்லாம் கடந்து, கால்பந்தாட்டத்தால் இணைக்கப்பட்டுள்ள விளையாட்டு வீரர்களையும், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் அனைத்து இரசிகர்களையும் வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஜூன் 12, இவ்வியாழன் துவங்கி, ஒரு மாதம் பிரேசில் நாட்டில் நடைபெறும் உலகக் கால்பந்து போட்டிகளின் துவக்க நாளையொட்டி, பிரேசில் நாட்டில் உள்ள "Rete Globo" என்ற தொலைக்காட்சிக்கு தான் அனுப்பியுள்ள ஒளி-ஒலிச் செய்தியில் திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.
கால்பந்தாட்டம் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது, உரையாடல், புரிந்துகொள்ளுதல் ஆகிய உயர்ந்த வழிகளை மனித குடும்பத்திற்குச் சொல்லித்தரும் ஓர் அரிய வாய்ப்பு என்று திருத்தந்தை தன் செய்தியின் துவக்கத்தில் கூறியுள்ளார்.
பொதுவாகவே, எந்த ஒரு விளையாட்டும், விளையாட்டுத் திடலில் நடைபெறுவது மட்டுமல்ல, அதற்கு வெளியிலும் விளையாட்டின் தாக்கங்களை நாம் உணர்கிறோம் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து விளையாட்டுக்களும் 'பயிற்சிகள் மேற்கொள்ளுதல்', 'நேரிய வழிகளில் விளையாடுதல்', 'எதிர் தரப்பினரையும் மதித்தல்' என்ற மூன்று பாடங்களைக் கற்றுத்தருகின்றன என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மூன்று பாடங்களையும் குறித்து சிறு விளக்கங்களையும் அளித்துள்ளார்.
எக்காரணம் கொண்டும் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்று விளையாடுவது தன்னலத்தை மட்டுமே வளர்க்கிறது; மாறாக, உண்மையான வெற்றியடைய, எதிர்த்தரப்பினரையும் மதிப்புடன் நடத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
தனக்கு இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும், குறிப்பாக, பிரேசில் அரசு அதிகாரிகளுக்கும் தன் நன்றியைக் கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.
மேலும், உண்மையான உடன்பிறந்தோர் உணர்வுடன், அனைவரும் இந்த உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தை அனுபவிக்க நான் வாழ்த்துகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் Twitter பக்கத்தில் இவ்வியாழன் எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.