2014-06-11 15:56:49

புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்தும் அரசின் விதிமுறைகள் கடினமான நிலையில் பயன்படுத்தப்படக்கூடாது - அமெரிக்க ஆயர் பேரவை


ஜூன்,11,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் தஞ்சம் தேடிவரும் புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்தும் அரசின் விதிமுறைகள் இனியும் அதே கடினமான நிலையில் பயன்படுத்தப்படக்கூடாது என்று அமெரிக்க ஆயர் பேரவை, அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
ஜூன் 10, இச்செவ்வாய் முதல், 13ம் தேதி, இவ்வெள்ளி முடிய, அமெரிக்காவின் New Orleans நகரில் நடைபெறும் அமெரிக்க ஆயர் பேரவை ஆண்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை, அமெரிக்க ஆயர்கள் சார்பில், Louisville பேராயர் Joseph Edward Kurtz அவர்கள், அரசுக்கு அனுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு, ஜூன் 27ம் தேதி, புலம்பெயர்ந்தோர் தொடர்பாக, அமெரிக்கப் பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மாற்றங்கள், அரசின் பிரதிநிதிகள் அவையில் இன்னும் விவாதத்திற்கு கொண்டுவரப்படாமல் இருப்பது, நல்லதொரு அடையாளம் அல்ல என்று ஆயர்களின் விண்ணப்பம் சுட்டிக்காட்டுகிறது.
மக்களின் மேய்ப்பர்கள் என்ற அடிப்படையில், இந்த மனிதப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பதில் ஆயர்கள் தீவிரமாக உள்ளனர் என்று கூறிய பேராயர் Kurtz அவர்கள், குறிப்பாக, இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு அரசு விரைவில் நல்ல முடிவுகளைத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஏப்ரல் 1ம் தேதி முதல் மேமாதம் இறுதிவரை அமெரிக்க ஆயர்கள் பல்வேறு தருணங்களில் புலம்பெயர்ந்தோர் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொணரும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.