2014-06-11 16:31:47

புனிதரும் மனிதரே : ஏழைகளுக்கு உதவியவர்(புனித ஜோசப் கொத்தலெங்கோ)


அன்று இத்தாலியின் தூரின் நகர் கிறிஸ்துவின் திருஉடல் ஆலயத்தில் ஓர் ஏழை பெண்ணின் அடக்கச்சடங்கை நிறைவேற்றினார் அந்த அருள்பணியாளர். இப்பெண் தனது மருத்துவத்துக்குச் செலவு செய்ய முடியாததால் இறந்தார் என்பதை அறிந்து ஏழை நோயாளிகளுக்கென சிறிய இல்லம் ஒன்றைத் தொடங்கினார் அந்த அருள்பணியாளர். அவர்தான் புனித ஜோசப் பெனடிக்ட் கொத்தலெங்கோ. அந்தச் சிறிய இல்லம் மருத்துவமனையாக வளர்ச்சியடையத் தொடங்கியபோது அதில் தன்னார்வப்பணி செய்வதற்கு புனித வின்சென்ட் தெ பவுல் சகோதர சகோதரிகளை அழைத்தார். 1831ம் ஆண்டில் தூரின் நகரில் காலரா நோய் பரவியபோது இவர் இந்த மருத்துவமனையை மூடிவிட்டு நகருக்கு வெளியே வால்தோக்கோ எனுமிடம் சென்று தனது ஏழைகளுக்கென மருத்துவப்பணியைத் தொடர்ந்தார். 1832ம் ஆண்டில் இந்த மருத்துவமனையும் வளர்ந்தது. இறைப்பராமரிப்பு இல்லம் என்று இதனை அழைத்தார். எந்த ஒரு வருவாயும் இன்றி பிறரன்பு ஒன்றால் மட்டுமே இவ்வில்லம் வளர்ந்தது. முதியோர், காதுகேளாதோர், பார்வையிழந்தோர், நடக்க இயலாதோர், மனநோயாளிகள், தெருவோரச் சிறுமிகள் என அனைவருக்கும் உதவி செய்யத் தொடங்கினார். இவர்களைப் பராமரிப்பதற்கு சபைகளையும் தொடங்கினார். 1786ம் ஆண்டு மே 3ம் தேதி பிரா என்ற ஊரில் பிறந்த இவர் வகுப்பில் கடைசி மாணவராக இருந்தார். எனினும், புனித தாமஸ் அக்குய்னாசிடம் செபித்த பின்னர் வகுப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தார். புனித ஜோசப் பெனடிக்ட் கொத்தலெங்கோ டைபாய்டு காய்ச்சலால் தாக்கப்பட்டு 1842ம் ஆண்டு இறந்தார். பல தடைகளை மீறி குருவான இவரின் விழா ஏப்ரல் 30.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.