2014-06-11 15:54:26

பணிவுடன் ஒருவர் ஒருவரை நெருங்கினால், கிறிஸ்தவ ஒன்றிப்பு இன்னும் ஆழமாக வேரூன்ற முடியும் - கர்தினால் Kurt Koch


ஜூன்,11,2014. கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற இலக்கை நோக்கி கத்தோலிக்கத் திருஅவையும் ஏனைய கிறிஸ்தவ சபைகளும் கடந்த 50 ஆண்டுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் உற்சாகம் தருகின்றன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் Connecticut மாநிலத்தில் Fairfield பல்கலைக் கழகத்தில் இவ்வாரம் நடைபெற்றுவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Kurt Koch அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறினார்.
அண்மையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமியில் மேற்கொண்ட திருப்பயணத்தில் தானும் அவருடன் செல்லும் வாய்ப்பு கிடைத்ததை, தன் செய்தியில் குறிப்பிட்ட கர்தினால் Koch அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்புப் பாதையில், ஒருவர் ஒருவரை வரவேற்கும் மனப்பான்மை நம்மிடம் வளரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்தவம் என்பது தனிப்பட்ட மனிதர்களிடம் தங்கிவிடுவதில் அர்த்தமில்லை, மாறாக, அது ஒரு குடும்பத்தில் வளரவேண்டிய சிறப்பு அம்சம் என்று கர்தினால் Koch அவர்கள் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாம் அனைவருமே தவறக் கூடியவர்கள் என்ற பணிவுடன் ஒருவர் ஒருவரை நெருங்கினால், கிறிஸ்தவ ஒன்றிப்பு இன்னும் ஆழமாக நம் மத்தியில் வேரூன்ற முடியும் என்று கர்தினால் ஜான் ஹென்றி நியூமன் அவர்கள் கூறியதை நினைவுறுத்திய கர்தினால் Koch அவர்கள், இத்தகையப் பணிவை வளர்க்க முயல்வோம் என்று விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.