2014-06-11 15:57:45

படகு மக்களும் உண்மையான மனிதப் பிறவிகள் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும் - ஆஸ்திரேலிய ஆயர்கள்


ஜூன்,11,2014. நாடுவிட்டு நாடு செல்லும் மக்களுக்குத் தஞ்சம் அளிப்பது, மனித முயற்சிகளிலேயே தலைசிறந்த ஒன்று என்று ஆஸ்திரேலிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
பல்வேறு நாடுகளிலிருந்து, ஆஸ்திரேலியாவை நாடி வரும் புலம்பெயர்ந்தோர், பொதுவாக, 'படகு மக்கள்' (boat people) என்று அழைக்கப்படுகின்றனர். படகு மக்களும் உண்மையான மனிதப் பிறவிகள் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்று ஆஸ்திரேலியாவின், டார்வின் ஆயர் Eugene Hurley அவர்கள் கூறினார்.
தஞ்சம் தேடிவரும் மக்களிடம் அரசும், ஏனையோரும் பயன்படுத்தும் கடினமான, புண்படுத்தும் வார்த்தைகளில் துவங்கும் வன்முறை, முதலில் களையப்பட வேண்டும் என்று ஆயர் Hurley அவர்கள் கேட்டுக் கொண்டார்.
ஆப்கானிஸ்தான், இலங்கை, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் தொடர்ந்துவரும் நிலையற்ற, வன்முறை நிறைந்தச் சூழல்களால், ஆஸ்திரேலியாவை நாடிவரும் மக்களை, அரசும், ஆஸ்திரேலிய மக்களும் வரவேற்கும் மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சம் தேடிவரும் மக்களைத் தடுத்துவைக்கும் முகாம்கள், மனநிலை பாதிப்பை உருவாக்கும் தொழிற்சாலைகள் என்று குறிப்பிட்டுள்ள ஆயர்கள், இத்தகைய நிலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வெகுவாக வேதனைப்படுத்தும் நிலையாக இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.